பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றும் கல்லூரி படிப்பை தொடர வழியின்றி சாலையோரத்தில் மின்சார கேபிள் பதிக்கும் வேலை செய்து வரும் மாணவியின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா மங்களூர் ஒன்றியத்தில் உள்ள வீ.சித்தேரியை சேர்ந்தவர் ராமசாமி சின்னபொண்ணு தம்பதியருக்கு துரைராஜ் என்ற மகனும், சத்யாதேவி என்ற மகளும் உள்ளனர். ராமசாமியும் மனைவி சின்னபொண்ணுவும் ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரத்தில் மின்சார புதைவட கேபிள் பதிக்கும் வேலையை தினக்கூலி அடிப்படையில் செய்து மகன் துரைராஜை டிப்ளமோ வரையில் படிக்க வைத்துள்ளனர்.
தங்களது மகள் சத்தியா தேவிக்கு அக்ரி படிப்பின் மேல் ஆர்வம் இருந்ததால் மேல்நிலை வகுப்பில் அக்ரி பாடப்பிரிவில் சிறப்பாக படித்து பனிரெண்டாம் வகுப்பில் 382 மதிப்பெண்கள் பெற்றார். இந்நிலையில் பெற்றோர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் ஈரோட்டில் மகள் சத்தியாதேவியையும் அழைத்து வந்து ஈரோடு அரசு கலைக்கல்லூரியில் சேர்க்க முடிவெடுத்தனர். ஈரோடு அரசு கலைக்கல்லூரியில் மாணவி விரும்பிய அக்ரி பாட பிரிவு இல்லாத நிலையில் அதே கல்லூரியில் உள்ள சுயநிதி பிரிவில் மைக்ரோ பயாலஜி பாட பிரிவை எடுத்து படிக்குமாறு கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளதாக தெரிகிறது.
கல்லூரி நிர்வாகம் சொன்னபடியே மைக்ரோ பயாலஜி பாட பிரிவில் படிக்க மாணவி ஒப்புக்கொண்ட நிலையில் திடீரென கல்லூரி நிர்வாகம் மாணவி சத்தியாதேவியை பயோ கெமிஸ்ட்ரி என்னும் வேறு ஒரு பாட பிரிவில் அட்மிசன் போட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து விளக்கம் கேட்ட மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் தெளிவான பதில் அளிக்காமல் இதே பாட பிரிவில் நீ படிக்கலாம் என்று கூறி உள்ளது.
வேறு வழியின்றி கல்லூரி நிர்வாகம் கூறியதை ஏற்றுக்கொண்டார். மேலும் மாணவியின் கல்லூரி படிப்பிற்கான கட்டணமாக ஆண்டிற்கு 22 ஆயிரம் ரூபாயும், பேருந்து கட்டணமாக 7 ஆயிரமும், தேர்வு கட்டணமாக 2 ஆயிரம் ரூபாயும் செலுத்தி உள்ளார். அதைத்தொடர்ந்து முதலாம் ஆண்டு கல்லூரிக்கு சென்று வந்த மாணவி சத்தியா தேவி முதல் பருவத்திற்கான தேர்வையும் எழுதி உள்ளார்.
தேர்வு எழுதி பல நாட்கள் ஆகியும் தேர்வுக்கான முடிவுகள் ஏதும் வராத நிலையில் கல்லூரியை தொடர்பு கொண்டு கேட்ட போது நிர்வகம் மாணவியிடம், பள்ளியில் கெமிஸ்ட்ரி பாடப்பிரிவு எடுத்து படிக்காத நிலையில் உனது கல்லூரி படிப்பை தொடர முடியாது எனவும் மாணவியை டிஸ்குவாலிபிகேசன் செய்துள்ளதாக கூறி உள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை கண்ணீருடன் முறையிட்டும் கல்லூரி சார்பில் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.
இன்றைய அனைத்து வேலை வாய்ப்பு செய்திகளையும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.
இந்நிலையில் கடந்த ஆண்டில் மாணவி சத்தியா தேவி செலுத்திய கல்லூரி கட்டணத்தில் 11 ஆயிரம் ரூபாயையும், மாணவியின் அசல் சான்றிதழ்களையும் கல்லூரி நிர்வாகம் மாணவிக்கு திருப்பி கொடுத்துள்ளது. இதனால் தனது லட்சிய படிப்பான வேளாண் பாட பிரிவில் படித்து வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறாத நிலையில் வேறு கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க பெற்றோரிடமும் பணம் இல்லாமல் பல நாட்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்த மணவி கடந்த சில மாதங்களாக தாயாருக்கு உதவியாக சாலையோரத்தில் மின்சார கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
நாள் முழுவதும் மாணவியும் அவரது தாயாரும் மின்சார பிரேக்கர் மூலமாக தார் சாலையை ஒரு மீட்டர் ஆழத்திற்கு குழி எடுத்து அதில் மின்சார கேபிளை பதித்து குழியை மூடினால் ஒரு மீட்டருக்கு 55 ரூபாய் கிடைக்கும் என்ற நிலையில் நாள்தோறும் இருவரும் சேர்ந்து 600 ரூபாய்க்கு கூலி வேலை செய்து வருகின்றனர்.
தனது கனவு நிறைவேறாமல் போய்விட்டதாக சத்தியாதேவியும், மகளின் கனவை நிறைவேற்ற முடியாமல் போனதாக அவரது தாயும் கண்ணீர் விட்டது காண்போர் மனதை ரணமாக்கியது.
பல துறைகளில் வெற்றிபெற்ற பெண்கள் உலக முழுவதும் மகளிர் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் நிலையில் தனது லட்சிய கனவான கல்லூரி படிப்பை கூட தொடர முடியாமல் போனது சத்தியா தேவிக்கு.