இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு பிரச்னையாக உள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை நீட் தேர்வை ரத்துசெய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் நேற்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
மத்திய அமைச்சர் அஸ்வினிகுமார் பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.) என்பது பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் அமைப்பு ஆகும். இந்த சங்கத்துக்கு மருத்துவ கல்லூரிகளை ஆய்வு செய்ய அதிகாரம் இல்லை. நாட்டில் மருத்துவ கல்வியை ஒழுங்குபடுத்துவதற்காக கடந்த 1956-ம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) உருவாக்கப்பட்டது. இது தற்போது தேசிய மருத்துவ ஆணையமாக (என்.எம்.சி.) மாற்றப்பட்டு இருக்கிறது.
தேசிய மருத்துவ ஆணைய தகவலின்படி நாட்டில் மொத்தம் 276 தனியார் மருத்துவ
கல்லூரிகள் உள்ளன. அதிகபட்சமாக கர்நாடகத்தில் 42 கல்லூரிகளும்,
மராட்டியத்தில் 34 கல்லூரிகளும், உத்தரபிரதேசத்தில் 31 கல்லூரிகளும்,
தமிழகத்தில் 27 கல்லூரிகளும் உள்ளன. 2014-ம் ஆண்டுக்கு பிறகு 82 தனியார்
மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. 2021-2022-ம் ஆண்டில் 37 புதிய
கல்லூரிகள் தொடங்க விண்ணப்பங்கள் வந்துள்ளன, என அந்த பதிலில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.