தமிழகத்தில், புதிய அரசு பொறுப்பேற்றதும், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அதிகாரத்தை குறைக்கும் வகையில், கமிஷனர் பணியிடம் உருவாக்கி, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கு, ஆசிரியர்கள் சங்கத்தில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பினாலும், கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்கத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது.குறிப்பாக, குரூப் 1 தேர்வெழுதி, மாவட்ட கல்வி அலுவலராக நேரடியாக நியமனம் செய்யப்படுபவரே, முதன்மை கல்வி அலுவலர், இணை இயக்குனர்களாக பணிப்புரிந்த பின், இயக்குனராக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.
இயக்குனருக்கு நிர்வாக ரீதியிலான அனுபவம் உள்ளதால் இப் பணியிடத்தின் அதிகாரங்களை, கமிஷனருக்கு வழங்க கூடாது என்பதே, ஆசிரியர் சங்க உறுப்பினர்களின் வாதமாக உள்ளது.ஆனால், இந்நடைமுறை தான், ஊழலுக்கு துணை நிற்பதாகவும், எவ்வித அதிரடி முடிவுகளும் எடுக்க முடியாத நிலைக்கு, சில நேர்மையான அதிகாரிகள் தள்ளப்படுவதாகவும் கருத்து எழுந்துள்ளது.