நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாக இயங்குவதற்கும், செரிமானம் நடைபெறுவதற்கும் முக்கிய சக்தியாக உடல் வெப்பம் இருக்கிறது.
அதே
நேரத்தில் வெப்பம் அதிகமானால் நமது உடலில் பல்வேறு நோய்கள் வந்துவிடும்.
எனவே, நமது உடல் உஷ்ணம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நமது உடல்
வாதம், பித்தம், கபம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. வாதம்,
பித்தம், கபம் ஆகிய மூன்றும் 1: ½ : ¼ அதாவது வாதம் முழுபங்கும், பித்தம்
அரைபங்கும், கபம் கால் பங்கும் இருக்க வேண்டும். இதில் பித்தம்
அதிகரிக்கும்போது உடற்சூடு பிரச்சனை வரும். இதற்கு நாம் அன்றாடம்
பின்பற்றும் வாழ்வியல் முறையும், உட்கொள்ளும் உணவுகளும்தான் முக்கிய
காரணமாகும். உடற்சூடு காரணமாக சில உஷ்ண நோய்கள் நம்மைத் தாக்குகிறது.
அதையடுத்து, உடற்சூடு வருவதற்கான அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள்,
உடற்சூட்டை தணிப்பதற்கு சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள், தவிர்க்க வேண்டிய
உணவுகள் குறித்து பார்க்கலாம்.
அறிகுறிகள்
உடற்சூடு
அதிகரித்தால் நீர் கடுப்பு, வயிற்று வலி, வேர்க்குரு, முகப்பரு போன்ற சில
அறிகுறிகள் தென்படும். அதை வைத்து, நாம் நமது உடலை சரி செய்து கொள்ள
வேண்டும்.
பாதிப்புகள்
உடற்சூடு அதிகரித்தால் நம்முடைய பித்தப்பை பாதிப்புக்குள்ளாகிறது. அதனுடன் கல்லீரலும் பாதிக்கப்படுகிறது.
மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், தூக்கமின்மை, வயிற்று எரிச்சல், சிறுநீரக எரிச்சல், கண் எரிச்சல், மூலநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
மாதவிலக்கு நாட்களில் உடற்சூடு காரணமாக, பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படும்.
சேர்த்துக்கொள்ள வேண்டியவை
2 மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
தினமும் காலை உணவுக்குப்பின் இளநீர் அருந்த வேண்டும்.
வாழைப்பழம், வெள்ளரி பிஞ்சு அடிக்கடி சாப்பிட வேண்டும்.
கரும்புச்சாறு, பழச்சாறு சாப்பிட வேண்டும்.
டீ ஸ்பூன் அளவு வெந்தயம் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.
தர்பூசணி பழம் சாப்பிட வேண்டும்.
கிர்ணிப்பழம் சாப்பிட வேண்டும்.
மோருடன் புதினா சாறு கலந்து சாப்பிட வேண்டும்.
உணவில் முள்ளங்கி சேர்த்து கொள்ள வேண்டும்.
வெறும் வயிற்றில் பால், தேன் கலந்து குடிக்க வேண்டும்.
துளசி இலை, விதையை நீரில் ஊறவைத்து குடிக்க வேண்டும்.
சீரகம், சோம்பு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.
கொழுப்பு நீக்கிய தயிரை தினமும் சாப்பிடலாம்.
எலுமிச்சை சாறு, நெல்லிச்சாறு குடிக்க வேண்டும்.
ஆப்பிள் பழம் சாப்பிடுவதும் உடல் சூட்டை தணிக்கும்.
மோர் குடிப்பதும் சூட்டை நன்கு தணிக்கும்.
கீரை வகைகளில் மணத்தக்காளி, பசலைக்கீரை, பொன்னாங்கன்னி போன்ற உணவுகள் சிறந்தவை.
வெள்ளரிக்காய்,
வெண்பூசணி, புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்துள்ள உணவுப்பொருட்களை
அதிக அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் சூடு தணியும்.
நாட்டு வெங்காயத்தை நெய்யில் நன்கு வதக்கி சாப்பிட்டாலும் உடல் சூடு குறையும்.
தவிர்க்க வேண்டியவை
புளிப்பு, உப்பு, காரம் உள்ள உணவுகளை அதிகளவில் உட்கொண்டால் நம்முடைய உடல் மிகுந்த உஷ்ணம் அடையும்.
டீ,
காபி, கோலா போன்ற பானங்கள், மீன், கருவாடு, கத்தரிக்காய், புளித்த தயிர்,
வினிகர், ஊறுகாய் போன்ற உணவுகளும் நம்முடைய உடற்சூட்டை அதிகரிக்கும்.
மதுப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் உடலின் வெப்பநிலை அதிகமாவதால் இவற்றை தவிர்ப்பது நல்லது.