ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 20 ஆயிரம் ஆசிரியர்களின் பெயர் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு பட்டியலில் இருந்து நீக்கம்-பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை !
அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 20 ஆயிரம்
பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் பெயர்கள் வேலைவாய்ப்பு அலுவலக
பதிவுமூப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது. இதற்கான பட்டியலை
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில்
அனுப்ப உள்ளது.
அரசு பணிகளுக்கு அல்லது ஆசிரியர் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோரின்
பட்டியல் மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைக்கு அனுப்பப்பட்டு,
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள பதிவுமூப்பு பட்டியலில் இருந்து அவர்களின்
பெயர்கள் நீக்கப்படும்.
இவ்வாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
மூலமாக அரசு பணி இடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் மற்றும் ஆசிரியர்
தேர்வு வாரியம் மூலமாக ஆசிரியர் பதவிக்கு தேர்வு ஆவோரின் பட்டியல் மாநில,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவுமூப்பு பட்டியலில் இருந்து
நீக்கப்படுகின்றன.
அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு மூலமாக ஏறத்தாழ 18 ஆயிரம்
பட்டதாரி ஆசிரியர்களும், 3 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும்
தேர்வுசெய்யப்பட்டார்கள். அவர்களுக்கு சென்னையில் கடந்த டிசம்பர் மாதம்
நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பணிநியமன ஆணை
வழங்கினார். பணிநியமன ஆணை பெற்ற ஆசிரியர்களில் பெரும்பாலானோர் பணியில்
சேர்ந்துவிட்டனர்.
இந்த நிலையில், மேற்கண்ட 20 ஆயிரம் ஆசிரியர்களின் பெயர்களை பதிவுமூப்பு
பட்டியல் இருந்து நீக்குவதற்காக அதற்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம்,
வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பும் பணியில்
ஈடுபட்டுள்ளது. பெயர்நீக்க பட்டியல் கிடைக்கப்பெற்றதும் சம்பந்தப்பட்ட
மாநில வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின்
பதிவுமூப்பு பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுவிடும்.முதுநிலை பட்டதாரியாக இருந்து பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்ந்தவராக
இருந்தால் அவர்களின் துறைத்தலைவரிடம் இருந்து தடையின்மை சான்று (என்.ஓ.சி.)
பெற்று முதுநிலை கல்வித்தகுதிக்கான பதிவுமூப்பை தக்க வைத்துக்கொள்ளலாம்.
இதற்கிடையே, புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் வேலைவாய்ப்பு அலுவலக
பதிவுஅட்டையை வாங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும்
உத்தரவு அனுப்பப்பட்டு உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தினர் தெரிவித்தனர்.