விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் பகுதியில்- கோடை விடுமுறையில் கிணற்றில் குளித்து மகிழும் மாணவர்கள்:
தியாகதுருகம்: கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து கிராமத்து மாணவர்கள் கோடை வெயிலுக்கு இதமாக கிணற்றில் குதித்து கும்மாளமிட்டு மகிழ்கின்றனர்.பள்ளி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்வு டென்ஷனில் இருந்து விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில் மாணவர்கள் உள்ளனர். கோடை வெயில் கொளுத்தும் மதிய வேளையிலும் வெட்டவெளி மைதானங்களில் மாணவர்கள் கவலையின்றி கிரிகெட் விளையாடுவதை காணமுடிகிறது.
கிராமத்தில் உள்ள நீச்சல் தெரிந்த மாணவர்கள் வயல்வெளிகளில் உள்ள பாசன கிணறுகளில் குளித்து மகிழ்கின்றனர். கடந்த ஆண்டு பருவ மழை ஏமாற்றியதால் கிணறுகளில் தண்ணீர் மட்டம் குறைவாகவே காணப்படுகிறது.
இருப்பினும், ஆறு, ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளை ஒட்டியுள்ள கிணறுகளில் ஓரளவு தண்ணீர் உள்ளது. இதில் மாணவர்கள் மணிக்கணக்கில் குளித்து மகிழ்கின்றனர். நீர் விளையாட்டுக்களிலும், குட்டிகரணம் போட்டும் நேரம் போவதே தெரியாமல் அவர்கள் சந்தோஷமாக குதித்து விளையாடுகின்றனர்.
இன்னும் ஒன்றரை மாதத்திற்கு கிராமத்து மாணவர்களுக்கு பாசன கிணறுகள் தான் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே நேரம் பாதுகாப்பும் முக்கியம் என்பதை மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். தெரியாத, பழக்கமில்லாத நீர் நிலைகளில் தேவையில்லாத வீர விளையாட்டுகளில் ஈடுபட கூடாது.








