படிப்பை பாதியில் நிறுத்திய மாணவிகளுக்கு வழிகாட்டிய வடலூர் வள்ளலார் குருகுலம்:
பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்ட மாணவிகளை
கண்டறிந்து அவர்களுக்கு மீண்டும் கல்வி வழங்கி 12-ம் வகுப்புத் தேர்ச்சி
பெறச் செய்துள்ளனர் வடலூர் வள்ளலார் குருகுலம் மேநிலைப்பள்ளி
நிர்வாகத்தினர்.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பொள்ளாச்சி மகாலிங்கத்தை தலைவராகக்
கொண்ட வடலூர் ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் 7 இடங்களில்
இயங்கிவருகிறது கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகள்.
அரசு நிதியுதவியுடன் நடைபெறும் இப்பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
குக்கிராமங்களில் குடும்பச் சூழ்நிலைக் காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே
கைவிட்ட ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்களைக் கண்டறிந்து அவர்களுக்கு
மீண்டும் கல்வி வழங்கி வருகிறது கஸ்தூர்பா காந்தி பாலிகா பள்ளி. 8-ம்
வகுப்பு வரை முடித்த மாணவிகள் தொடர்ந்து மேல்வகுப்பு பயில அவர்கள் சொந்த
செலவிலேயே படிக்க வேண்டிய சூழல் ஏற்படுவதால், பலர் 8-ம் வகுப்பு வரை போதும்
என்ற நிலையில் தங்கள் குடும்பங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையறிந்த வடலூர் வள்ளலார் குருகுலம் மேநிலைப் பள்ளித் தாளாளர்
ஆர்.செல்வராஜ், 8-ம் வகுப்பு வரை தேர்ச்சிப் பெற்ற மாணவிகள் தொடர்ந்து
படிக்க ஏதுவாக வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில்
அம்மாணவிகளுக்கு இடமளித்து கல்வி வழங்குவதுடன், அவர்கள் தங்குவதற்கும்,
உணவுக்கும் ஓபிஆர் நிர்வாகமே ஏற்பாடு செய்துள்ளது.
அந்த வகையில் கஸ்தூர்பா காந்தி பாலிகா பள்ளியிலிருந்து 8-ம் வகுப்பு
தேர்ச்சிப் பெற்ற 19 மாணவிகள், தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக வடலூர்
வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் பயின்று தற்போது 12-ம் வகுப்பை
முடித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் செங்கல் சூளையில் வேலை செய்வோர், வீடுகளில் வேலையும் அன்றாட கூலி தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
தற்போது 12-ம் வகுப்பு முடித்த 19 மாணவிகளும் தாங்கள் விரும்பும்
பட்சத்தில், ஓபிஆர் கல்வி நிறுவனத்தின் கீழ் செயல்படும், ஆசிரியர் பயிற்சி,
செவிலியர் கல்லூரி அல்லது கலைக் கல்லூரிகளிலேயே சேர்ந்து பயிலலாம் என
கல்வி நிறுவனத்தின் தாளாளர் செல்வராஜ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கல்வி நிறுவனத்தின் தாளாளர் ஆர்.செல்வராஜ் கூறுகையில்,
"ந.மகாலிங்கத்தின் வழிகாட்டுதல்படி ஏழைப் பெண்களின் கல்விக்கு
முக்கியத்துவம் அளித்து அவர்களது வாழ்விலும் ஒளியேற்ற வேண்டும் என்ற
நோக்கில் கஸ்தூர்பா காந்தி பாலிகா பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அவர்கள்
பள்ளிப் படிப்பைத் தொடர அரசு முன்வந்தால் ஏழை மாணவிகளின் வாழ்வாதாரம்
மேலும் சிறப்படையும்' என்றார் செல்வராஜ்.








