அண்ணாமலைப் பல்கலை: தகுதி அடிப்படையில் அனுமதி சேர்க்கை:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா
மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்டி., எம்எஸ்
மற்றும் பிஜி டிப்ளமோ மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்த
மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வு வைத்து அனுமதிச்
சேர்க்கை செய்யப்பட்டுள்ளது.
நிதிநெருக்கடிக்குப் பிறகு, தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி
ஷிவ்தாஸ்மீனா, பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் 2013-14 கல்வி ஆண்டிற்கான ராஜா முத்தையா மருத்துவக்
கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்டி., எம்எஸ் மற்றும்
முதுநிலை டிப்ளமோ மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு
தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வு வைக்கப்பட்டு எவ்வித நன்கொடை இன்றி 83
மாணவ, மாணவிகள் அனுமதி சேர்க்கை செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற சேர்க்கை
பல்கலைக்கழக வரலாற்றிலேயே முதல்முறையாக நடந்துள்ளது.
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள ஏழை மாணவிக்கு பல்கலைக்கழக நிர்வாகி
ஷிவ்தாஸ்மீனா முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அனுமதிச் சேர்க்கை வழங்கிய
போது, கட்டணம் கட்டுவதற்கு வசதி இல்லை என நிர்வாகியிடம் அம்மாணவி
தெரிவித்துள்ளார். உடனடியாக அண்ணாமலைநகர் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
வங்கி கிளை மேலாளரை அழைத்து கல்விக் கடன் பெற ஏற்பாடு செய்துள்ளார்.
இதேபோன்று பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை, எம்பிபிஎஸ்.,
பிடிஎஸ், பிபிடி, பிஎஸ்சி நர்சிங் படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை
முழுமையாக தகுதி அடிப்படையில் நடைபெறும் என்பதால் தமிழகம் முழுவதும்
மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது இப்பல்கலைக்கழகம்.








