உதவி மையங்கள் பற்றாக்குறை - தமிழக அரசு கோரிக்கை வைக்குமா?
ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., ஆகிய கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில், CBSE அமைப்பால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 8 உதவி மையங்கள் போதாது என பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேற்கூறிய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகள், முற்றிலும் ஆன்லைன் முறையில் மாறிவருகின்றன. கடந்தாண்டு இந்த நுழைவுத்தேர்வை 40 ஆயிரம் தமிழக மாணவர்கள் எழுதினர்.
இந்தாண்டு நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப செயல்பாடு நவம்பர் 15ம் தேதி தொடங்கியது மற்றும் அது டிசம்பர் 26ம் தேதி வரை நடைபெறும். எனவே, படிவங்கள், ஆவணங்கள், கையெழுத்து, போட்டோகிராப்கள் மற்றும் கட்டணம் உள்ளிட்ட அம்சங்களை ஆன்லைனில் சமர்ப்பித்தல் போன்ற செயல்பாடுகளுக்கு, மாணவர்களுக்கு உதவும் வகையில், தமிழகத்தில் 8 உதவி மையங்களை CBSE அறிவித்தது.
அதன்படி, சென்னையில் 3 பள்ளிகளும், மதுரை, கோவை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் தலா 1 பள்ளியும் உதவி மையங்களாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குஜராத் மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில், 30 மற்றும் அதற்கு மேற்பட்ட உதவி மையங்கள் அறிவிக்கப்பட்டன.
எனவே, தமிழகத்தில் இந்த உதவி மையங்களின் எண்ணிக்கை போதாது என்று பரவலாக குரல்கள் எழுந்துள்ளன. அதிக மாணவர்கள் மேற்கூறிய நுழைவுத்தேர்வை எழுதும் நிலையில், சேலம், கரூர், ஈரோடு, விழுப்புரம் மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் உதவி மையங்கள் அறிவிக்கப்படவில்லை என்று பெற்றோர்கள் குறைபட்டுள்ளனர்.
டெல்லி, பீகார், உத்திரபிரதேசம் போன்ற மாநில அரசுகளிடமிருந்து, அதிகளவில் உதவி மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், தமிழக அரசிடமிருந்து அதுபோன்ற எந்த கோரிக்கையும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.