நூலகத்தை பயன்படுத்துவோரை கவுரவிக்க வேண்டியது அவசியம்:
நூலகத்தை தொடர்ச்சியாக பயன்படுத்துவோரை கவுரவிக்க வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டது.ஊட்டி மைய நூலகத்தில் 46வது தேசிய நூலக வார விழா நேற்று கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ஊட்டி அரசு கலைக் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் டாக்டர் ஆத்மஜோதி, புத்தக கண்காட்சியை துவக்கி வைத்து பேசுகையில்,
"தற்போது நடத்தப்படும் நிகழ்ச்சிகள் வெறும் சடங்கு, சம்பிரதாயத்துக்கு மட்டுமே நடத்தப்படுகின்றன. அதன் நோக்கம் மக்களை சென்றடைவதில்லை. நூலக வார விழாவின் நோக்கம், நூலகத்தில் உள்ள புத்தகங்களை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்பது தான்.
ஆனால், நூலகம் மற்றும் நூலக புத்தகங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நூலகத்திற்கு தொடர்ச்சியாக வருபவர்கள், புத்தகங்களை அதிகளவில் படிப்பவர்களை, ஆண்டுதோறும் நடக்கும் நூலக வார விழாவில் பரிசு வழங்கி, கவுரப்படுத்த வேண்டும்; அது, பிறருக்கு ஊக்குவிப்பாக இருக்கும்," என்றார்.
"மலைச்சாரல்" கவிமன்ற தலைவர் கணேசன், பவுன்ராஜ், ஆசிரியர் சுந்தர்ராஜன் பேசினர். நூலக வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பிறகு, பல்வேறு தலைப்புகளில் சொல்லரங்கம் நடந்தது. நூலகர், கருணாகரன் நன்றி கூறினார்.