தமிழகத்தில் 22 புதிய மாணவ-மாணவியர் விடுதிகள் திறப்பு:
தமிழகத்தில் புதிதாக 22 மாணவ-மாணவியர் விடுதிகளை
முதல்வர் திங்கள்கிழமை திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் விடியோ
கான்பரன்சிங் முறை மூலம் புதிய விடுதிகளை அவர் திறந்தார்.
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அரசு மிக பிற்படுத்தப்பட்டோர் பள்ளி
மாணவர் விடுதிக் கட்டடத்தையும், திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்,
பெரியகோட்டை, தொப்பம்பட்டி, தாண்டிக்குடி, சித்தையன்கோட்டை, காஞ்சிபுரம்
மாவட்டம் செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம், திருப்பூந்துருத்தி,
கடலூர் மாவட்டம் அண்ணா கிராமம், விருத்தாசலம், விழுப்புரம் மாவட்டம்
திருநாவலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் மாவட்டம் ஆயக்காரன்புரம்,
பெரம்பலூர் மாவட்டம் காரை, நீலகிரி மாவட்டம் கூடலூர், ராமநாதபுரம் மாவட்டம்
பரமக்குடி, திருச்சி மாவட்டம் மேட்டுப்பாளையம், துவாக்குடி, விருதுநகர்
மாவட்டம் திருச்சுழி என மொத்தம் 22 இடங்களில் பள்ளி மாணவ-மாணவியருக்கான
விடுதிகளை முதல்வர் திறந்து வைத்தார்.
இந்தப் புதிய விடுதி கட்டடங்கள் மூலம் ஆயிரத்து 200 மாணவ, மாணவியர்
பயன்பெறுவர். இந்த விடுதிகளில் சாப்பாட்டு மேஜை, அலமாரிகள், தீயணைப்புக்
கருவிகள், மின்சார புகைபோக்கி, சூரிய ஒளி மூலம் நீரை சூடுபடுத்தும் கருவி,
குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.