அரசு செலவில் இங்கிலாந்தில் பட்ட மேற்படிப்பு: மேலும் 8 மாணவர்கள் தகுதி:
அரசு செலவில் இங்கிலாந்தில் பட்ட மேற்படிப்பு மேற்கொள்ளும் திட்டத்துக்கு மேலும் 8 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்ற மாணவர்கள் 2014 ஜனவரியில் இங்கிலாந்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குப் பட்ட மேற்படிப்பு மேற்கொள்வதற்காக அனுப்பப்பட உள்ளனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி பயிலும் வகையில் புதிய திட்டத்தை தமிழக அரசு அண்மையில் அறிமுகம் செய்தது. மேலும் 2013-ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் அரசு கலை அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த 25 மாணவர்கள் மற்றும் 5 உதவிப் பேராசிரியர்களை இங்கிலாந்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப தமிழக அரசு அரசாணையையும் பிறப்பித்தது.
கல்வித் தகுதி:
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஏதாவது ஒரு முதுநிலை பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இளநிலை பட்டப் படிப்பில் 70 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவும் இருக்க வேண்டும்.
தகுதி பெறுவது எப்படி?:
இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பட்ட மேற்படிப்பின் மூன்றாம் மற்றும் நான்காம் பருவ படிப்புகளை இங்கிலாந்தில் உள்ள ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க முடியும்.
விரிவுரையாளர்களைப் பொருத்தவரை ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு ரூ. 15 லட்சத்தை தமிழக அரசு செலவழிக்கிறது. இதற்குத் தகுதி பெற சர்வதேச ஆங்கில மொழி திறனாய்வு தேர்வில் (ஐ.எல்.டி.இ.எஸ்.) அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும். இந்தத் தேர்வில் தலா 10 மதிப்பெண்களுக்கு 4 தாள்கள் இடம்பெற்றிருக்கும். இதில் ஒவ்வொரு தாளிலும் குறைந்தபட்சம் 6 மதிப்பெண்களுக்கு மேல் பெற வேண்டும். இந்தத் தேர்வில் எளிதாக தேர்ச்சி பெறும் வகையில், பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 14 மாணவர்களும், 3 உதவி பேராசிரியர்களும் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். இப்போது மேலும் 8 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு உயர் கல்வி மன்ற உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
இந்தத் திட்டம் தொடர்பாக அனைத்து கல்லூரிகளுக்கும் முதலில் சுற்றறிக்கை அனுப்பப்படும். பின்னர் கல்லூரி அளவில் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சிலில் ஒரு வார கால பயிற்சி அளிக்கப்படும். இறுதியாக ஐ.எல்.டி.இ.எஸ். தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில் 25 பேரை அனுப்ப அரசு அனுமதி அளித்தது. ஆனால், மாணவர்கள் ஐ.எல்.டி.இ.எஸ். தேர்வில் அதிக மதிப்பெண் பெற திணறி வருகின்றனர். பல மாதங்களுக்கு முன்பே 14 பேர் அனுப்பப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள 11 பேரில் 8 பேர் இப்போது தகுதி பெற்றுள்ளனர். 3 பேர் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இருந்தபோதும் தகுதி பெற்றுள்ள 8 பேருடன் சேர்த்து, தகுதி பெறாத 3 பேரையும் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். வரும் 2014 ஜனவரி மாதத்தில் இவர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.