தேர்தல் பணியில் ஈடுபட்டு ஜனநாயகம் தழைத்தோங்க
ஆசிரியர்கள் ஊழியர்கள் அனைவருமே மகிழ்ச்சியுடன் பங்கு கொள்ளத் தயாராகவே
உள்ளனர். ஆனால் சில குறைபாடுகள் தேர்தல் ஆணையத்தால் நிவர்த்தி செய்யப்பட
வேண்டும். வருங்காலங்களில் வர இருக்கும் தேர்தல்களிலாவது இவை
நடைமுறைப்படுத்தப்பட தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொள்வோம்.
1. தேர்தல் பணிக்கான வாக்குச்சாவடி அவரவர்
சொந்தத் தொகுதியிலேயே இருக்க வேண்டும். அதிகபட்சம் 20 கி.மீ தொலைவிற்குள்
இருக்க வேண்டும். அனைவரும் EDC கொண்டு பணிபுரியும் சாவடியிலேயே
வாக்களிக்கும் விதமாக அமைக்க வேண்டும். தொலைதூரத்தில் சாவடி இருந்தால்
தபால் ஓட்டுப் போடுவதில் உள்ள சம்பிரதாயங்களுக்குப் பயந்து சிலர்
வாக்களிப்பதில்லை. பெண் ஊழியரை அழைத்துச் செல்லும் கணவர் / தந்தை /
உடன்பிறந்தோரும் வாக்களிக்க முடிவதில்லை.
2. தேர்தல் பணி மதிப்பூதியம் பயணப்படி போன்றவை இருமடங்காக உயர்த்தப்பட வேண்டும்.
3. பணியாளர்களின் அப்போதைய தர ஊதியம், அடிப்படை
ஊதியத்தைக் கொண்டு தேர்தல் பணி நியமிக்கக் கூடாது. அவர்களது பணியிடத்தின்
சாதாரண நிலையின் தர ஊதியமும் அப்போதைய அடிப்படை ஊதியமும் எடுத்துக்கொள்ள
வேண்டும். (அதாவது ஒரு தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் 5400 தர ஊதியம்
பெறுவதால் அவரை வா.சா.தலைமை அலுவலராகவும் அதே சாவடியில் அவரது
உ.தொ.க.அலுவலர் 4700 தர ஊதியம் பெறுவதால் வா.ப.அலுவலராகவும் நியமிக்கும்
குளறுபடிகள் ஆங்காங்கே நடந்துகொண்டுள்ள ன. தொ.ப.த.ஆசிரியரின் சாதாரண நிலை
தர ஊதியம் 4500 என்பதைக் கருத்தில் கொண்டால் இக்குழப்பம் நிகழாது) தனி
ஊதியம் இருப்பின் அதை தர ஊதியத்துடன் (கருத்தியலாக) சேர்த்தே கணக்கில்
கொள்ள வேண்டும். தமிழகத்தில் 2800 தர ஊதியத்திற்கு அடுத்த தர ஊதியம் 4200ல்
தான் ஊதியக்கட்டு ஆரம்பிக்கிறது. தர ஊதியக் குறைபாடு காரணமாகவே தனி ஊதியம்
750 வழங்கப்பட்டது. அதனால் தர ஊதியத்தை 3550 எனக் கணினியில் பதிவிட்டால்
தான் அவரவர் அந்தஸ்துக்குரிய பணியைக் கணினி நியமிக்கும்.
4. தேர்தல் பணிக்கான புகைப்படத்துடன் கூடிய
விண்ணப்பம் (?) பெறும்போது அனைவரிடமும் பெறவேண்டும் அல்லது ஒருவரிடமும்
பெறக்கூடாது. சிலரிடம் கட்டாயமாகப் பெறுவதும் பலரிடம் சலுகை காட்டி
விட்டுவிடுவதும் கண்டனத்திற்குரியது. கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள்,
55 வயதுக்கு மேற்பட்டோர், தொடர்சிகிச்சை மேற்கொள்வோர், மூன்று
வயதிற்குட்பட்ட குழந்தைகளை உடையோர், நோய்வாய்ப்பட்ட குடும்ப
உறுப்பினர்களைப் பராமரிப்போர் ஆகியோருக்கு தேர்தல் பணியிலிருந்து
விலக்களிக்க வேண்டும்.
5. தேர்தல் பயிற்சி வகுப்புகளை அந்தந்த
ஒன்றியங்களிலேயே நடத்த வேண்டும். பயிற்சி வகுப்பில் நல்ல குடிநீர், உணவு,
காற்றோட்ட வசதி, பேருந்து நிலையம் / இரயில் நிலையத்திலிருந்து பயிற்சி
மையம் செல்ல, திரும்பி வர வாகன வசதி போன்றவை செய்யப்பட வேண்டும்.
6. BLO பணியாளர்களுக்கான வரையறையைத் தெளிவாக்க
வேண்டும். சில பகுதிகளில் முதுகலை ஆசிரியர்களும் சில பகுதிகளில் சத்துணவு
ஊழியர்களும் BLO வாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆண்டு முழுவதும் பணி,
வாக்காளர் சீட்டு விநியோகம், வாக்காளர் சேர்ப்பு முகாம் பணி, பட்டியல்
சரிபார்ப்பு, வாக்காளர் அட்டை விநியோகம் போன்ற பணிகளுடன் தேர்தலன்று
முழுநாளும் சாவடியில் பணிபுரிவதால் BLOக்களுக்கும் தேர்தலன்று மதிப்பூதியம்
வழங்க வேண்டும்.
7. தேர்தலுக்கு முதல் நாளும் தேர்தலன்றும் நல்ல
தரமான உணவும் அவ்வப்போது தேநீரும் வழங்க வேண்டும். சுகாதாரமான கழிப்பறை,
குடிநீர், காற்றோட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
8. பெண் பணியாளர்கள் வீடு வந்து சேர வாகன வசதியும் பந்தோபஸ்தும் வழங்க வேண்டும்.
9. பதற்றமானவை எனக் கண்டறியப்பட்ட சாவடிகளிலும்
மலைப்பகுதிகளில் உள்ள சாவடிகளிலும் பெண் பணியாளர்களை நியமிக்கக் கூடாது.
அங்கு காவலர்களைக் கூடுதலாக நியமிக்க வேண்டும்.
10. தேர்தல் பணி குறித்த கையேட்டையும்
குறுந்தகட்டையும் அனைத்துப் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். கையேடும்
காணொளிக் காட்சியும் அந்தந்த மாநில மொழிகளில் இருக்க வேண்டும்.