பள்ளி பாடத்திட்டத்தில் தொழிற்கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
அம்முயற்சி வெற்றியடைய, மக்களின் மனநிலை மாற வேண்டியதும் அவசியம் என்று
துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
பல்வேறான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், பள்ளி நிலையில், தொழிற்கல்வியை
கொண்டு வந்து போதிப்பதென்பது சவாலான ஒன்றே. ஏனெனில் மக்களின் மனநிலை அதை
ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு இன்னும் வரவில்லை. இதனால், அவர்கள் வெறுமனே எந்த
இலக்குமின்றி, ஒரு பட்டப் டிப்பை முடித்துவிட்டு வேலை வாய்ப்பின்றி
சிரமப்படுகிறார்கள்.
தற்போதைய நிலையில், இந்தியாவில், மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி என்பது குறைந்தளவிலேயே நடைமுறையில் உள்ளது.
தற்போது இந்தியாவில் 22 கோடியே 70 லட்சம் மாணவர்கள் பள்ளியில் சேர்ந்து
படிக்கிறார்கள். ஆனால், அவர்களில் தொழிற்கல்வியில் சேர்வோரின் எண்ணிக்கை
ஒரு ஆண்டிற்கு 35 லட்சம் என்ற அளவிலேயே உள்ளது.
ஆனால், சீனாவில் இந்த எண்ணிக்கை 9 கோடி என்ற அளவிலும், அமெரிக்காவில் 1
கோடியே 10 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.