அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15 கல்வி
ஆண்டில் பிஇ படிப்பிற்கு 3 ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்சி வேளாண்மை
படிப்பிற்கு ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்சி தோட்டக்கலை படிப்பிற்கு 75
மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா
தெரிவித்தார்.
பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா
செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு மருத்துவம், வேளாண்மை, பொறியியல்
படிப்புகளுக்கு தமிழகஅரசின் இடஒதுக்கீடு விதிப்படியும், மாணவர்கள்
மேல்நிலைப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்கள்
அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும். சேர்க்கைக்கு
விண்ணப்பித்த மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே
கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வு தேதி விபரங்கள் பின்னர்
அறிவிக்கப்படும். எப்பிபிஎஸ், பிடிஎஸ், பிஇ, பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி
தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக நிர்வாக
அலுவலகத்திலும், 62 படிப்பு மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
எம்பிபிஎஸ் படிப்பிற்கு 150 மாணவர்களும், பிடிஎஸ் படிப்பிற்கு 100
மாணவர்களும் சேர்க்கப்படவுள்ளனர். மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண்
படிப்புகளுக்கு கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும்.
பிஇ ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் புதிய படிப்பு:
இந்த கல்வி ஆண்டில் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் பிஇ ஆட்டோமொபைல்
இன்ஜினியரிங் என புதிய படிப்பு தொடங்கப்படுகிறது. அனுமதி சேர்க்கைக்காக
அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளத்தில் தனியாக ஒரு பக்கம்
உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5 ஆண்டு ஒருங்கிணைந்த
பட்டப்படிப்புகளுக்கான (5 Years Integrated Courses) அனுமதி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முதல் பட்டதாரி கல்வி உதவித்தொகை: கடந்த ஆண்டு
அண்ணாமலைப் பல்கலைக்கலையில் தமிழகஅரசின் முதல்பட்டதாரி கல்வி உதவித்தொகை
1600 மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு முதல்
தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசின் உதவித்தொகை வழங்கப்படும். அனுமதி
சேர்க்கையின் போது வங்கிகளின் முகாம் அமைத்து மாணவர்களுக்கு கல்விக்கடன்
பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு மருத்துவ உதவி திட்டம்: பல்கலைக்கழக ராஜா
முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு
மருத்துவ உதவித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இலவசமாக
மகப்பேறு சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த
ஆண்டு மட்டும் 1400 குழந்தைகள் பிறந்துள்ளன. மகப்பேறு சிகிச்சை பிரிவில்
பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொலைதூரக்கல்வியில் 1,34,500 பேர் சேர்ப்பு: பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி
இயக்ககத்தில் கடந்த 2013-14 ஆண்டில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 500 மாணவர்கள்
சேர்ந்துள்ளனர். அரசு பொறுப்பேற்றதற்கு முந்தைய ஆண்டான 2012-13 ஆண்டில் 1
லட்சத்து 19 ஆயிரம் 500 பேர்தான் சேர்ந்தனர். கடந்த ஆண்டு அரசு பொறுப்பேற்ற
பின்னர் 15 ஆயிரம் பேர் கூடுதலாக சேர்ந்து பயிலுகின்றனர். இந்த 2014-15
ஆண்டில் 2 லட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள்.
கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட
பல்வேறு மாவட்டங்களில் மே.21-ம் தேதி பிளஸ்டூ மதிப்பெண் பட்டியல்
வழங்கப்படும் பள்ளிகளின் வளாகத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்,
அலுவலர்கள் சென்று, பள்ளிக்கல்வித்துறையினருடன் இணைந்து பல்கலைக்கழக
படிப்புகள் குறித்த கையேடுகளை மாணவர்களிடம் வழங்கி விளக்கமளிக்கவுள்ளனர் என
ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார். பேட்டியின் போது பதிவாளர் என்.பஞ்சநதம்,
மாவட்ட வருவாய் அதிகாரிகள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ்
ஆகியோர் உடனிருந்தனர்.