பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மறுகூட்டல் கோரி 1,500 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) வெளியிடப்பட்டன. பிளஸ் 2
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை (மே 9)
முதல் புதன்கிழமை (மே 14) வரை தங்களது பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது.
அதன்படி, மூன்று நாள்களில் (ஞாயிற்றுக்கிழமை தவிர) சுமார் 57 ஆயிரம்
மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மறுகூட்டல் கோரி
1,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விடைத்தாள் திருத்தும் மையங்களிலிருந்து இவர்களுடைய விடைத்தாள்கள்
சென்னைக்கு எடுத்துவரப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம்
செய்யப்படும். மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை இணையதளத்திலிருந்து
பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விடைத்தாள் நகல் கிடைத்த 3 நாள்களுக்குள் மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஜூன்
2-ஆம் தேதிக்குள் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் நகல் இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு விடைத்தாள் நகல் கோரி 84 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
மறுகூட்டல்: மறுகூட்டல் என்பது விடைத்தாளில் மதிப்பீட்டாளர்களால்
வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்ணை வினாவாரியாக, பாடவாரியாக மறுகூட்டல் செய்வது
ஆகும். இதில் ஏதேனும் மதிப்பெண் கூடுதலாக வந்தால் மட்டுமே கணக்கில்
எடுத்துக்கொள்ளப்படும்.
ஒரு விடை மதிப்பீடு செய்யப்படாமல் இருந்தால், திருத்தப்படாமல்
இருந்தால், திருத்தப்பட்டும் மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்தால் மட்டுமே
அந்த விடைக்கு உரிய மதிப்பெண் வழங்கப்படும். மறுகூட்டலில் மதிப்பெண்
உயர்ந்தால் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மதிப்பெண் குறைந்தால்,
பழைய மதிப்பெண்ணே வழங்கப்படும்.
நேரடியாக மறுகூட்டல் மட்டுமே செய்தால் போதும் என்று விரும்புபவர்கள்
விடைத்தாள் நகல் கோர வேண்டாம். அவர்கள் உரிய கட்டணம் செலுத்தி
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
மறுமதிப்பீடு: மறுமதிப்பீட்டின்போது தேர்வரின் மதிப்பீடு செய்யப்பட்ட
விடைத்தாளினை மூத்த மூன்று பாட ஆசிரியர் கொண்ட குழுவால் மீண்டும் அனைத்து
விடைகளும் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும்.
இந்தக் குழுவுக்கு விடைத்தாளில் ஏற்கெனவே வழங்கப்பட்ட மதிப்பெண்ணைக்
கூட்டவோ, குறைக்கவோ அதிகாரம் உள்ளது. இந்தக் குழு வழங்கும் மதிப்பெண்ணே
இறுதியானது.
மறுமதிப்பீட்டில் கூடுதலாக மதிப்பெண் வழங்கப்பட்டாலோ, ஏற்கெனவே
வழங்கப்பட்ட மதிப்பெண் குறைக்கப்பட்டாலோ விண்ணப்பதாரருக்கு திருத்தம்
செய்யப்பட்ட புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
ஆலோசனைக்குப் பிறகே விண்ணப்பிக்க வேண்டும்: கடந்த ஆண்டு 5,600 பேர்
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். இவர்களில் ஆயிரம் பேருக்கு 10
மதிப்பெண் வரை குறைந்துவிட்டது. மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு
முன்பாக மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும்.
ஏதேனும் ஒரு வினாவுக்கான விடை சரியாக மதிப்பிடப்படவில்லையென்றால், அதை
மட்டும் மனதில் வைத்து மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கக் கூடாது.
விடைத்தாள் முழுவதும் மதிப்பீடு செய்யப்படும் என்பதால் மதிப்பெண்
குறைவதற்கும் வாய்ப்புள்ளது.
சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களைக் கொண்டு விடைத்தாள் முழுவதையும்
பரிசீலிக்க வேண்டும். வேறு ஏதேனும் கேள்விக்கான விடைக்கு மதிப்பெண் குறைய
வாய்ப்புள்ளதா எனவும் பார்க்க வேண்டும்.
அவ்வாறு, குறைவதற்கு வாய்ப்புள்ள மதிப்பெண்ணையும், அதிகரிக்க
வாய்ப்புள்ள மதிப்பெண்ணையும் கணக்கிட்ட பிறகு மதிப்பெண் கூடுவதற்கு
வாய்ப்பிருந்தால் மட்டுமே மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என
ஆசிரியர்கள் தெரிவித்தனர்.