உயர்கல்வி ஆசிரியர்களுக்கான "நெட்" தேர்வில் தேர்வு முறை, வயது வரம்பு உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் செய்வது தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை பல்கலைக்கழக மானிய குழுவான யு.ஜி.சி. கேட்டுள்ளது.பள்ளிக் கல்வி அல்லது உயர்கல்வி என எந்த கல்வியாக இருந்தாலும் திறமையான ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே, சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். இதற்காக, தேசிய மற்றும் மாநில அளவில் பள்ளி ஆசிரியர்களுக்காக, தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
உயர்கல்வியில் கல்லூரி மற்றும் பல்கலை ஆசிரியர்களுக்கு "ஸ்லெட்" மற்றும் "நெட்" தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், "ஸ்லெட்" தேர்வு மாநில அளவில் தமிழக அரசாலும், தேசிய அளவில் "நெட்" தேர்வு யு.ஜி.சி.யாலும் நடத்தப்படுகிறது. நெட் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரி, பல்கலைகளிலும் உதவி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவர். நெட் தேர்வை பொறுத்தவரை இரண்டு பிரிவாக உதவி பேராசிரியர் மற்றும் ஆய்வாளர் நிலைக்கும் நடத்தப்படுகிறது.
ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் இத்தேர்வுகளில் பங்கேற்கின்றனர். இத்தேர்வில், முதல் இரண்டு தாள்கள் அப்ஜக்டிவ் முறையிலும், மூன்றாவது தாள் எழுத்து தேர்வாகவும் அமையும். இதில், அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்றாலும், பாடவாரியான கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், இத்தேர்வில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள், மதிப்பெண், வயது வரம்பு உள்ளிட்டவற்றில் திருத்தங்கள் குறித்து கருத்துக்களை தெரிவிக்கும்படி யு.ஜி.சி. கோரியுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவன நிர்வாகி மற்றும் பொதுமக்கள் இதுகுறித்த கருத்துக்களை, தங்கள் இணையதளத்தில் தெரிவிக்கும்படி, அதற்கான இணையதள முகவரியையும் யு.ஜி.சி. வெளியிட்டுள்ளது.
அதில், உயர்கல்வி ஆசிரியர்களை தேர்வு செய்வதில் நெட் தேர்வு சிறந்த வழிமுறையாக உள்ளதா; தேர்வில் பங்கேற்க வயது வரம்பு தேவையா; இரண்டு பிரிவாக தேர்வை பிரிக்கலாமா; இளநிலை ஆய்வாளர் தேர்வுக்கு (ஜே.ஆர்.எப்.) வயது வரம்பை தளர்த்தலாமா; என்பது உள்ளிட்ட 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதில் கிடைக்கும் கருத்துக்கள் அடிப்படையில், தேர்வு முறையில் விரைவில் மாற்றம் வரலாம் என, கூறப்படுகிறது.