புதுவையில் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரி
மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்ட மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே
தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 250 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.புதுவை
மத்திய பல் கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 54 துறைகளில் 16 துறைகளில் மட்டும்
தான் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு
வழங்கப்படுவதாகவும், அனைத்து துறைகளிலும் இடஒதுக் கீடு வழங்கக் கோரியும்,
இடஒதுக்கீடு தர மறுக்கும் துணைவேந்தரை கண்டித்தும், அனைத்து அரசு கலை
அறிவியல் கல்லூரிகளிலும் காலியாக உள்ள 159 விரிவுரையாளர் பணியிடங்களை
நிரப்பக் கோரியும் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள்
நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
முத்தியால்பேட்டை
பாரதிதாசன் மகளிர் கல்லூரி, லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி, கதிர்காமம்
இந்திராகாந்தி கல்லூரி, தவளக்குப்பம் ராஜீவ்காந்தி கல்லூரி, மதகடிப்பட்டு
காமராஜர் கல்லூரி உட்பட பல்வேறு அரசு கலை அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த 15
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
மதகடிப்பட்டில்
உள்ள காமராஜர் கலை கல் லூரியை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள்
வகுப்புகளை புறக்கணித்தனர். அவர்கள், கல்லூரி வளாகத்தில் அமர்ந்து
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிள்ளைச்சாவடியில்
உள்ள புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி இல்லம்
அருகில் இருந்து பல்வேறு அரசு கல்லூரிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ,
மாணவிகள் ஊர்வலமாக புறப்பட்டு காலாப்பட்டு பல்கலைக்கழக நுழைவு வாயிலை
சென்றடைந்தனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க தலைவர் ரஞ்சித், இந்திய
ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் சரவணன் ஆகி யோர் தலைமை தாங்கி னர். இந்திய
மாணவர் சங்க செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார்.
மாணவர்களின்
போராட்டத்தையொட்டி எஸ்பி பைரவசாமி தலை மையில் காலாப்பட்டு இன்ஸ்பெக்டர்
வரதராஜ் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பல்கலைக்கழக வளாகத்தில்
குவிக்கப்பட்டு இருந்தனர். போலீஸ் தடையை மீறியும் பல்கலை கேட்டை தள்ளி
மாணவர்கள் உள்ளே நுழைய முயன்றனர். இதனால் போலீசார்& மாணவர்கள் இடையே
தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, நுழைவு வாயில் எதிரே கிழக்கு கடற்கரை
சாலையில் மாணவர்கள் அமர்ந்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு
ஏற்பட்டது.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 250 மாணவ, மாணவிகளை போலீசார் கைது செய்து காலாப்பட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.