'மாணவியர் தனியாக செல்வதையும்; பேருந்து நிறுத்தங்களில் தனியாக நிற்பதையும்
அறவே தவிர்க்க வேண்டும்; குழுவாக செல்ல, தலைமை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்ய
வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், அனைத்து பள்ளிகளுக்கும்
சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், சக மாணவர்களால்
தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. பள்ளி மாணவி ஒருவர், அதே பள்ளியில்
படிக்கும் மாணவனால் கொலை செய்யப்பட்டார். நேற்று கரூரில், ஒன்பதாம் வகுப்பு
படிக்கும் மாணவி, இளைஞர் ஒருவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
மேலும், மாணவ, மாணவியர் விபத்துகளில் சிக்கும் சூழலும் ஏற்பட்டு வருகிறது.
இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கும் விதமாக, சில தினங்களுக்கு முன்,
பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன், 16 அறிவுரைகளுடன், ஒரு சுற்றறிக்கையை,
அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
* மாணவர்கள், பேருந்து படியில் பயணித்தல்; ஆட்டோவில் அதிக எண்ணிக்கையில்
பயணித்தல் தொடர்கிறது. இதை தவிர்க்க, மாணவர்களுக்கு, தலைமை ஆசிரியர்கள்
அறிவுரை வழங்க வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் கட்டட பராமரிப்பு; புதிய கட்டட பணிகள் நடக்கும் இடங்களுக்கு, மாணவர்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்.
* பள்ளியில், இருபால் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, போதிய கழிப்பறை, குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும்.
* பருவகால மாற்றங்களால் ஏற்படும் 'டெங்கு, சிக்குன் குனியா' காய்ச்சல்களில்
இருந்து பாதுகாக்க, தேவையான அறிவுரைகளை, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் கிணறுகள், நீர் தொட்டிகள், இடியும்
நிலையில் உள்ள கட்டடங்கள், உயரழுத்த மின் கம்பங்களில், அறுந்து தொங்கும்
மின்ஒயர்கள் அகற்றப்பட வேண்டும்.
* மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் போதும், பள்ளி வளாகத்திற்கு உள்ளும்,
அவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பெண் குழந்தைகள், எக்காரணம் கொண்டும் தனியாக செல்வது மற்றும் பேருந்து
நிறுத்தங்களில் தனியாக நிற்பதும், அறவே தவிர்க்கப்பட வேண்டும். மாணவ,
மாணவியர் குழுவாக செல்ல, தலைமை ஆசிரியர்கள் உரிய ஏற்பாடுகளை செய்தல்
வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.