10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இத் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் பெரும்பாலும்
முக்கியப் பகுதிகளிலிருந்தே வந்ததால், மாணவர்கள் குறைந்தபட்சம் 50
மதிப்பெண்கள் வரை பெறலாம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 19-ஆம் தேதி
தொடங்கியது. தமிழ், ஆங்கில மொழிப்பாடத் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில்,
முக்கியப் பாடமான கணிதப் பாடத் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண்கள், 10 மதிப்பெண்களுக்கான வினாக்கள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
ஒரு மதிப்பெண் வினாவில் பிழை: ஒரு மதிப்பெண் பகுதியில்
18-ஆவது வினா தமிழில் சரியாக உள்ளது. ஒரு நாணயத்தை மூன்று முறை சுண்டினால்
"மூன்று தலைகள் அல்லது மூன்று பூக்கள்' கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன என்ற
கேள்வி உள்ளது. இதற்கான விடை 1-இன் கீழ் 4 ஆகும் என்பது சரியாக
அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கில வழியில் "மூன்று தலைகள் அல்லது மூன்று
பூக்கள்' என்பதற்குப் பதிலாக "மூன்று தலைகள் மற்றும் மூன்று பூக்கள்'
கிடைப்பதற்கான நிகழ்தகவு என்று தவறாகக் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான விடை
பூஜ்யம் ஆகும். அது விடைகளிலேயே கிடையாது. இந்தப் பிழைக்கு ஆங்கில வழி
மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என ஆசிரியர்கள் கோரினர்.
இதே போன்று, 38-ஆவது வினாவில் தமிழில் உள்ள கேள்விக்கு உரிய ஆங்கில மொழிபெயர்ப்பு சரியாக இல்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.