பதிவுத் துறை அலுவலர்களின் கோரிக்கைகளை
நிறைவேற்றுவதாக கூறி அரசு வாக்குறுதி அளித்து 3 மாதங்களுக்கு மேல் ஆகியும்
தற்போது வரை நிறைவேற்றவில்லை. எனவே, மீண்டும் போராட்டம் நடத்த தமிழ்நாடு
பதிவுத்துறை அலுவலர் சங்கம் முடிவு செய்துள்ளது.தமிழகம்
முழுவதும் 518 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. பதிவுத்துறை மூலம்
விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றம், சிட்பண்ட் நிறுவனம், வழிகாட்டி பணி,
சங்கங்கள் மற்றும் திருமண பதிவு ஆகியவை பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த
துறை அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன்
மூலம் ஆண்டுக்கு 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்படுகிறது. சராசரியாக 8
ஆயிரம் கோடி வருமானம் ஈட்டப்படுகிறது.
இந்த
துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், வழிகாட்டி குளறுபடியால்
இழப்பை காரணம் காட்டி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ள அனைத்து நிலை
சார்பதிவாளர்களின் தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்வதும், அனைத்து
நிலையில் பதவி உயர்வு பட்டியலை விரைந்து வெளியிட வேண்டுமென்றும் உள்ளிட்ட
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிசம்பர் 9ம் தேதி சென்னை
பதிவுத்துறை தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு பதிவுத்துறை சங்கம் சார்பில்
போராட்டம் நடைபெறும் என அறிவித்தது.
இதுதொடர்பாக
கடந்த நவம்பரில் தமிழக அரசு அதிகாரிகள் பதிவு அலுவலர் சங்கத்தின்
நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பதிவு
அலுவலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தனர். ஆனால், அரசு
அறிவித்து மூன்று மாதங்களாகியும் இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், தங்களை அலட்சியப்படுத்தும் தமிழக அரசை கண்டித்தும்,
கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்த தமிழ்நாடு பதிவுத்துறை
அலுவலர் சங்கம் முடிவு செய்துள்ளது.நன்றி தினகரன்