தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்
பணிபுரியும் ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சென்னையில்
இன்று நடக்கிறது. பேச்சுவார்த்தை சுமூகமான நிலையை எட்டுமா அல்லது
ஊழியர்கள் அறிவித்தபடி ஸ்டிரைக் நடக்குமா என்று இன்று தெரிந்துவிடும்.தமிழ்நாடு
அரசு போக்குவரத்து கழகத்தில் 1.42 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கான 11வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம்
தேதியுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து 12வது ஊதிய ஒப்பந்தம் செப்டம்பர் 1ம்
தேதி முதல் அமலுக்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால்,
தமிழக அரசு இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு காலம் தாழ்த்தி
வருகிறது எனக் கூறி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்பட 11 போக்குவரத்து
தொழிற்சங்கங்கள் இணைந்து டிசம்பர் மாதம் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதில் மாநிலம் முழுவதும்
போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பித்தது.
இதையடுத்து,
போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் 12வது ஊதிய ஒப்பந்தம் குறித்து
பேசுவது தொடர்பாக கூடுதல் நிதித்துறை செயலாளர் உமாநாத் தலைமையில் 14 கொண்ட
குழுவை தமிழக அரசு ஜனவரி மாதம் நியமித்தது.
இந்நிலையில்,
பேச்சுவார்த்தை குழு தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கடந்த மாதம் 11ம் தேதி
பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. ஆனால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
நடத்தாமல் மனுக்களை மட்டும் பெற்றனர். இதனை கண்டித்தும், தொழிலாளர்களை அரசு
ஏமாற்றி வருகிறது எனக் கூறியும் அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தம்
செய்வதற்கான நோட்டீசை அந்தந்த போக்குவரத்து கழகத்தில் மீண்டும் வழங்கியது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாநகர
போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில்,
கூடுதல் நிதித்துறை செயலாளர் உமாநாத் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை
நடைபெற உள்ளது.
பேச்சுவார்த்தையின்போது
போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிலாளர்களின் 21 அம்ச கோரிக்கைகளை
முன்வைக்க உள்ளதாகவும், அதில் பிரதானமாக 50 சதவீத ஊதியத்தை வழங்க வேண்டும்
என்ற கோரிக்கையை தெரிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இன்று
நடக்கும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் வேலை
நிறுத்தம் கைவிடப்படும் எனவும், இல்லாவிடில் அறிவித்தது போல் இந்த வார
இறுதிக்குள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்குவது உறுதி எனவும்
தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தை சுமூக மாக முடிக்க தேவையான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருகிறது.