மத்திய
இடைநிலைக் கல்வி வாரிய(சிபிஎஸ்இ) பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம்
வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த
தேர்வை 24 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.இந்தியா
முழுவதும் உள்ள 9407 சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவர்கள், 12ம்
வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் ஆண்டுப் பொதுத் தேர்வு தொடங்குகிறது.
பத்தாம் வகுப்பில் நாடு முழுவதும் 13 லட்சத்து 73 ஆயிரத்து 853 மாணவ
மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் 8 லட்சத்து 17 ஆயிரத்து 941 பேர்
மாணவர்கள். 5 லட்சத்து 55 ஆயிரத்து 912 பேர் மாணவியர். கடந்த ஆண்டை விட
இந்த ஆண்டு 3.37 சதவீதம் கூடுதலாக மாணவ மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வு
எழுதுகின்றனர்.
தவிரவும், 12ம் வகுப்பு
தேர்வில் நாடு முழுவதும் 10 லட்சத்து 40 ஆயிரத்து 368 மாணவ மாணவியர் எழுத
பதிவு செய்தனர். அவர்களில் 4 லட்சத்து 32 ஆயிரத்து 985 பேர் மாணவியர். 6
லட்சத்து 7 ஆயிரத்து 383 பேர் மாணவர்கள். இந்நிலையில் இன்று நடக்கும்
தேர்வில் 10 லட்சத்து 29 ஆயிரத்து 874 மாணவ மாணவியர் தான் எழுதுகின்றனர்.
மேற்கண்ட இரண்டு தேர்வுகளுக்காக நாடு முழுவதும் 3164 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட இரு
வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் இன்று ஒரே நாளில் தொடங்கின்றன. முதல்
நாளான இன்று ஆங்கிலத் தேர்வு நடக்கிறது. சிபிஎஸ்இ தேர்வுகளில் எந்த ஆண்டும்
இல்லாத வகையில் இந்த ஆண்டு முக்கிய பாடங்களின் கேள்வித்தாள் வடிவமைப்பு
மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் திறனை வெளிப்படுத்தும்
வகையில் கேள்விகள் இடம் பெறுகின்றன.