‘வாட்ஸ் அப்’பில்வெளியான வினாத்தாள்
பிளஸ்-2 கணித தேர்வு கடந்த 18-ந் தேதி நடந்தது. அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வினாத்தாள் ‘வாட்ஸ் அப்’பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, ஓசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் 4 பேரும் ஊத்தங்கரை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் நேற்று முன்தினம் நேரில் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் வேதகன் தன்ராஜ் உள்பட 5 பேர் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளார்கள்.
கோர்ட்டில் ஆஜர்
கைதான ஆசிரியர்கள் 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், அதற்காக ஓசூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-2-ல் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நேற்று மாஜிஸ்திரேட்டு சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகிய 4 பேரும் ஊத்தங்கரை கிளை சிறையில் இருந்து ஓசூர் கோர்ட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.
விசாரணையின் போது, கைதான 4 ஆசிரியர்களையும் 4 நாட்கள் காவலில் விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். இதுதொடர்பாக விசாரித்த மாஜிஸ்திரேட்டு சுரேஷ்குமார், 4 ஆசிரியர்களையும் 2 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
பத்திரிகையாளர்கள் குவிந்தனர்
முன்னதாக கைதான 4 ஆசிரியர்களும், ஓசூர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்கள் என்ற தகவல் அறிந்ததும் பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும், வீடியோ கேமராமேன்களும் கோர்ட்டு வளாகத்தில் குவிந்தனர். அவர்கள் வேனில் வந்து இறங்கிய 4 ஆசிரியர்களையும் புகைப்படம் எடுக்க தயாரானார்கள். பத்திரிகையாளர்கள் வந்த தகவல் அறிந்த ஆசிரியர்கள் 4 பேரும், முகத்தை துணியால் மறைத்தபடி கோர்ட்டுக்குள் வந்து சென்றார்கள்.








