பெண்களின் கட்டாய கல்வி வயது வரம்பை 20 ஆக உயர்த்த வேண்டும் என்று நேஷனல்
விமன்ஸ் ப்ரண்ட் அமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் நேற்று நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் என்ற பெண்கள்
அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சித்தி ஆலியா கூறியதாவது: நாட்டின் சமூக,
பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் கல்வி முக்கிய அங்கம் வகிக்கிறது. நாம்,
நமது ஜனநாயகத்தை வெற்றியடைய செய்ய வேண்டும். எனவே, வரும் 8ம் தேதி உலக மகளிர் தினத்தையொட்டி நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் சார்பில் நாடு முழுவதும் பெண்களுக்கு கட்டாய கல்வியை வலியுறுத்தி கருத்தரங்கம், பொதுக்கூட்டம், பேரணி நடத்தப்பட உள்ளது. மேலும், தமிழகத்தை பொறுத்தவரை 30.5 சதவீதம் பெண்கள் மட்டுமே கல்வி அறிவு பெற்றுள்ளனர். அதில் 2.9 சதவீதம் பட்டதாரி பெண்கள் ஆகும். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால் தமிழகத்தில் தற்போது பெண்களின் கட்டாய கல்வி வயது வரம்பை 14ல் இருந்து 20 ஆக உயர்த்த வேண்டும்.
அப்போது தான் பெண்களுக்கு உரிய நீதி கிடைக்கும். பெண் கல்வியை வலியுறுத்தி எங்கள் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விழிப்புணர்வு பிரசாரம், பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் தற்போது கிராமப்புறங்களில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு குறைந்து வருகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே, பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களை பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.








