மானியமற்ற வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது.சர்வதேச
சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் பெட்ரோல், டீசல் விலை நேற்று
முன்தினம் உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து மானியம் அல்லாத வீட்டு உபயோக
சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டது. இதன்படி டெல்லியில்
ரூ.610 ஆகவும், சென்னையில் ரூ.605.50 ஆகவும் உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 12
சிலிண்டர் மானிய விலையில் அளிக்கப்படுகிறது. மானியத்துடன் 14.2 கிலோ
சிலிண்டர் டெல்லியில் ரூ.417ஆகவும் சென்னையில் ரூ.404.50 ஆக உள்ளது. கடந்த
ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து 7 முறை மானியம் அல்லாத சிலிண்டர் விலை
குறைக்கப்பட்டு வந்தது. ஏழு தவணையாக மொத்தம் ரூ.317.5 குறைக்கப்பட்டது.
கடைசியாக கடந்த பிப்ரவரி 1ம் தேதி 14.2 கிலோ சமையல் காஸ் ரூ.103.5 குறைக்கப்பட்டது.
இதுபோல்
விமான எரிபொருள் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் விமான
எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு ரூ.3,849.97 அதிகரித்து ரூ.50,363
ஆகியுள்ளது. சென்னையில் ரூ.55,346ஆக உயர்ந்துள்ளது. இது
8.2%அதிகரிப்பாகும்.
விமான எரிபொருள்
விலையும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து 7 மாதங்கள் விலை குறைக்கப்பட்ட
நிலையில், தற்போது திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று விலை உயர்த்திய
பிறகும் விமான எரிபொருள் விலை கடந்த 2011 பிப்ரவரியில் விற்றதை விட
குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.