தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை
நடைபெற்ற அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, அஞ்சல் பட்டுவாடா
உள்ளிட்ட பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
தமிழகத்தில் நடைபெற்ற ஒரு நாள் வேலைநிறுத்தப்
போராட்டத்தில், தேசிய அஞ்சல் ஊழியர்கள் சம்மேளனத்தின் (என்.எப்.பி.இ)
கீழுள்ள 9 சங்கங்கள் பங்கேற்றன. போராட்டத்தில், தொழிற்சங்க உரிமைகள்
பறிப்பது, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட "கோர் பேங்கிங்' திட்டம், நீண்ட
காலமாக அஞ்சல் காலி பணியிடங்கள் நிரப்பாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
பணிகள் பாதிப்பு: அஞ்சல் ஊழியர்கள் போராட்டம் காரணமாக,
சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை போன்ற மாநகரங்களில் அஞ்சல் சேவை
கடுமையாகப் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, கிராமப்புறங்களில் அஞ்சல் பட்டுவாடா
பாதிக்கப்பட்டது.
ஊழியர்கள் போராட்டம் காரணமாக, விரைவு அஞ்சல், வைப்பீடு,
அஞ்சல் பட்டுவாடா, மணியார்டர், ரயில் அஞ்சல் சேவை (ஆர்.எம்.எஸ்) போன்ற
சேவைகள் முடங்கின.
இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களைத் தவிர,
மற்ற சங்கங்களைச் சேர்ந்த குறைந்தளவு ஊழியர்களை கொண்டு அஞ்சல் அலுவலகங்கள்
வழக்கம்போல வியாழக்கிழமை இயங்கின.
சென்னை மாநகரைப் பொருத்தமட்டில், அண்ணா சாலை தலைமை
அஞ்சல் அலுவலகப் பணிகளில், பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால், மற்ற
இடங்களில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் ஊழியர்கள் பணிக்கு வராததால் சேவைகள்
பாதிப்புக்குள்ளாகின.
இதில், முக்கியப் பணியான ரயில்களில் கொண்டு செல்லக்கூடிய கடிதங்கள் அடங்கிய கட்டுகள் ரயில் நிலையங்களில் ஆங்காங்கே தேங்கிக் கிடந்தன.
இதுகுறித்து, தேசிய அஞ்சல் ஊழியர்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி கூறியதாவது:
மார்ச் 10-ஆம் தேதி, தொழிலாளர் நல ஆணையம், அஞ்சல் துறை
நிர்வாகத்திடம் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் பற்றிய அறிவிப்பை
கோரிக்கை மனுவாக அளிக்கப்பட்டது. அதன் பேரில், சென்னை உள்பட தமிழகம்
முழுவதும் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள்
ஈடுபட்டனர். இதில், 50 சதவீத ஊழியர்களுக்கும் மேல் பணிக்கு வராததால் பணிகள்
பாதிக்கப்பட்டன.
தற்போது அஞ்சலகங்கள் "கோர் பேங்கிங்' (மைய வங்கி)
வசதிக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் தனியாருக்கு
வழங்கப்பட்டுள்ளது. தனியாரிடம் வழங்கப்பட்டதால், நாள்தோறும் அஞ்சல்
ஊழியர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். அதாவது தேவையான
வலையமைப்பு (சங்ற்ஜ்ர்ழ்ந்) சரிவர கிடைப்பதில்லை. இதன் காரணமாக, பல மணி
நேரம் பணிகள் பாதிக்கப்படுகின்றன.
கணினியில் "கோர் பேங்கிங்' இணைப்பு சரிவர கிடைக்காததால், பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது.
இதேபோல, பல்வேறு கோரிக்கைகளை நீண்ட காலம்
செயல்படுத்தப்படாமல் உள்ளதைக் கண்டித்தும், தமிழகத்தில் வியாழக்கிழமை ஒரு
நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது என்றார் அவர்.