அரசு மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை
மேம்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்
செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை
மேம்படுத்தக் கோரி அங்கு பயிலும் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள்
நடத்தும் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை
தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தில் 1,657 தலித், பழங்குடியினர் நல அரசு விடுதிகளும், 1,305
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அரசு விடுதிகளும்
உள்ளன. 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தங்கி, உண்டு, உறங்கி
கல்வி பயிலும் இந்த விடுதிகளில் குடிநீர், கழிவறை, குளியலறை உள்ளிட்ட
அடிப்படை வசதிகள் போதுமானதாகவும், சுகாதாரமானதாகவும் இல்லை.
எனவே, கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
சுயநிதி, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தலித் மாணவர்களுக்கு இலவசக்
கல்வி வழங்கும் அரசாணையை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். அரசு நிர்ணயம்
செய்ததைவிட கூடுதலாக கல்விக் கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்த
வேண்டும் என ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.நன்றி தினமணி








