வாழ்வியல் நெறிமுறைகளை முழுமையாகத்
தெரிந்து கொள்ள விரும்புவோர் திருக்குறளை முழுமையாகப் படிப்பதுடன், அதில்
உள்ள கருத்துகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மூத்த தலைவர் தா.பாண்டியன் வலியுறுத்தினார்.
சென்னைப் பல்கலைக்கழக தமிழ்மொழித் துறை சார்பில்
எம்.பி.அரங்கநாதன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு மெரீனாவில் உள்ள
பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் "திருக்குறள்
காட்டும் வாழ்வியல் நெறி' என்ற தலைப்பில் தா.பாண்டியன் பேசியதாவது:
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் செல்லிடப்பேசி, இணையம்,
நவீன போக்குவரத்து, வளர்ச்சி பெற்ற நாகரிகம் என எதுவுமில்லை. ஆனால்,
ஜனநாயகத்தின் சிறப்பு, மண் வளத்தைப் பாதுகாத்தல், இல்லறத்தின் பெருமை,
அரசியல் நடத்தும் விதம் என திருக்குறளில் உள்ள கருத்துகள்
எக்காலத்துக்கும், எந்த நாட்டவருக்கும் பொருந்தும்.
இன்றைய அரசியல் பிரமுகர்கள் சமுதாயத்தில் எவ்வாறு
நடந்துகொள்ள வேண்டும் என்பதை திருக்குறளைப் படித்துத் தெரிந்து கொள்வது
அவசியம். ஒரு சமூகத்தை திருத்த வேண்டுமெனில் முதலில் தனி மனிதன் திருந்த
வேண்டும் என்று வள்ளுவர் கூறிய கருத்தை நாம் மெய்ப்பிக்க வேண்டும்.
இறை நம்பிக்கை இல்லாதவர்களும், பகுத்தறிவுக் கொள்கையைக்
கடைப்பிடிப்பவர்களும் கூட மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சாவூர்
பிரகதீஸ்வரர் ஆலயம் உள்பட தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற
திருத்தலங்களுக்குச் செல்ல வேண்டும். அங்கு உள்ள சிற்பங்களைப் பார்ப்பதன்
மூலம் நமது கட்டடக் கலை, ஓவியக் கலை அந்தக் காலத்தில் எந்தளவுக்கு
சிறப்புப் பெற்று விளங்கியது என்பதை உணர முடியும் என்றார் அவர்.
கருத்தரங்கில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர்
டேவிட் ஜவஹர், தமிழ்மொழித் துறை தலைவர் பேராசிரியர் அ.பாலு உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.