மாநிலத்தில் 2-வது இடம்
திருச்சி எஸ்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி மாணவி சி.கவுசிகா கடந்த மாதம் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான போது ஆங்கில பாடத்தில் 192 மதிப்பெண் உள்பட மொத்தம் 1186 மதிப்பெண் பெற்று இருந்தார். இவர் தனது விடைத்தாள்களை மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தார்.
மறு மதிப்பீட்டில் கவுசிகா ஆங்கில பாடத்தில் கூடுதலாக 5 மதிப்பெண் பெற்றார். இதனால் ஆங்கில பாடத்தில் 197 மதிப்பெண் பெற்றதுடன், அவருடைய மொத்த மதிப்பெண் 1191 ஆக உயர்ந்தது. இதன் மூலம் மாநில அளவில் 2-வது இடத்தை கவுசிகா பெற்றுள்ளார்.
பாடவாரியாக அவர் பெற்ற மதிப்பெண் வருமாறு-
தமிழ்-196, ஆங்கிலம்-197, இயற்பியல்-199, வேதியியல்-200, உயிரியல்-200, கணிதம்-199.
மாணவி பேட்டி
மாநில அளவில் இரண்டாவது இடத்தை பிடித்த மாணவி கவுசிகா நிருபர்களிடம் கூறுகையில், பிளஸ்-2 தேர்வில் ஆங்கில பாடத்தை நன்றாக எழுதி இருந்தேன். ஆனால் தேர்வு முடிவு வெளியான போது 192 மதிப்பெண் மட்டுமே கிடைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மறு மதிப்பீடு கேட்டு விண்ணப்பம் செய்தேன். இதன் மூலம் தற்போது மாநில அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளேன். நான் மருத்துவம் படிப்பதற்காக விண்ணப்பம் செய்து இருக்கிறேன். தர வரிசை பட்டியலிலும் எனது பெயர் வந்துள்ளது என்றார்.