மத்திய அரசின் சமையல் எரிவாயு உருளை நேரடி மானியத் திட்டம், தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்தைப் பொருத்தவரை 1.53 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. இவற்றில் ஜூன் 24-ஆம் தேதி நிலவரப்படி, சுமார் 1.38 கோடி வாடிக்கையாளர்கள் (89.6 சதவீதம்) நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
கால அவகாசம்: சமையல் எரிவாயு உருளை நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
எனவே, நேரடி மானியத் திட்டத்தில் இணையாத வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மானியமில்லாத விலையில் எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதாவது, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயிக்கும் மானியம் இல்லாத விலையில் மட்டுமே ரசீதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
எனினும், நேரடி மானியத் திட்டத்தில் இதுவரை சேராத வாடிக்கையாளர்கள் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை இந்தத் திட்டத்தில் இணைய கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
கால அவகாசத்துக்குள் இணைவதால் கிடைக்கும் பயன்கள்!
நேரடி மானியத் திட்டத்தில் இணைய வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் இந்த திட்டத்தில் இணைந்த பிறகு முன்வைப்புத் தொகை ரூ.568-ம், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கான மொத்த மானியத் தொகையும் சேர்த்து வழங்கப்படும்.
எனினும், வாடிக்கையாளர்கள் ஜூன் 30-ஆம் தேதிக்கு பிறகும் நேரடி மானியத் திட்டத்தில் இணைய முடியும். ஆனால், அவ்வாறு இணைபவர்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களுக்கான மானியத்தொகை வழங்கப்படாது. வாடிக்கையாளர்கள் எப்போது இந்தத் திட்டத்தில் இணைகிறார்களோ அந்த மாதம் முதல் மட்டுமே மானியத்தொகை வழங்கப்படும். எனவே, வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் இணைவது சிறந்தது என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
மானியத்தை ஒப்படைத்த 6 லட்சம் பேர்
நாடு முழுவதும் சுமார் 15.5 கோடி எரிவாயு இணைப்புகள் உள்ளன. இவற்றில் வசதி படைத்தோர் சமையல் எரிவாயு மானியத்தைக் கைவிட வலியுறுத்தும் "கிவ் இட் அப்' பிரசாரத்தையும் கடந்த மார்ச் 27-ஆம் தேதி பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
மேலும், "கிவ் இட் அப்' பிரசாரத்தின் ஒரு பகுதியாக மானியத்தை ஒப்படைக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கென
www.givitup.in என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர, இணையதளத்தைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களும், எளிய முறையில் மானியத்தை ஒப்படைக்க ஏதுவாக எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) மூலம் மானியத்தை ஒப்படைக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்களும் மானியத்தை ஒப்படைக்க முடியும்.
அதன்படி ஜூன் 24-ஆம் தேதி நிலவரப்படி சுமார் 6.5 லட்சம் பேர் சமையல் எரிவாயு மானியத்தை ஒப்படைத்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.








