திருச்செங்கோடு அருகே காளிப்பட்டியில், பள்ளிக்குச் சென்ற மாணவியரை,
மாணவர்கள் ஐந்து பேர் வெள்ளிக்கிழமை கேலி செய்துள்ளனர். இதனையடுத்து, கேலி
செய்த ஐந்து மாணவர்கள் மீதும், போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் மீதும்
வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள காளிப்பட்டி கோடங்கிபாளையம்
மதுரைவீரன் தெருவில் வசிக்கும் மாணவ, மாணவியர் மல்லசமுத்திரம் அரசுப்
பள்ளியில் பயின்று வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல் மாணவியர் பள்ளிக்குச் செல்ல
காளிப்பட்டியிலிருந்து பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதே
பகுதியைச் சேர்ந்த வேறு தரப்பு மாணவர்கள் சிலர் மாணவியரை கேலி செய்ததாகக்
கூறப்படுகிறது.
அதைக் கண்ட மாணவியர் பகுதி மாணவர்கள், பள்ளிக்குச் சென்று கேலி செய்த
மாணவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இரு
தரப்பு மாணவர்களுக்கு இடையே கடுமையான சண்டை உருவானது.
இது தொடர்பாக, இரு தரப்பினருக்கும் தகவல் பரவியதைத் தொடர்ந்து, கேலி
செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரைவீரன் தெரு பொது மக்கள் 60
பேர் காளிப்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த, திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியா,
பள்ளிபாளையம் ஆய்வாளர் ராஜு மற்றும் மல்லசமுத்திரம் போலீஸார் சம்பவ
இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பதட்டம் அதிகரிக்கவே, இருபதுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம், சம்பந்தப்பட்ட ஐந்து மாணவர்கள் மீது நடவடிக்கை
எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து
சென்றனர்.
இதனையடுத்து, கேலி செய்த ஐந்து மாணவர்கள் மீதும், போக்குவரத்துக்கு இடையூறு
செய்து, சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படுத்தியதாக போராட்டத்தில் ஈடுபட்ட 60
பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இப்பிரச்னையால், காளிப்பட்டி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.