கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒன்றிய அளவில் அரசுப் பள்ளிகளில் சிறந்து
விளங்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கத்
திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தமிழரசு
தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் தெரிவித்தது: கல்விக்காக
அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இத்திட்டங்கள் போர்க்கால
அடிப்படையில் மாணவர்களைச் சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசுப்
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தை கல்வி ரீதியில் முதன்மை மாவட்டமாகக் கொண்டு வரத்
தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷின் ஆலோசனைப்படி, பொதுத் தேர்வு எழுதும்
மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு
வழங்க வேண்டும்.
குறிப்பாக மாணவ, மாணவியர்களின் பாதுகாப்புக்கு உள்பட்டே இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி சார்ந்த செயல்பாடுகள் அனைத்தும் பெற்றோர்களுக்கு தெரிவித்தே
செயல்படுத்தப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி இடைநிற்றல்
மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் ஆசிரியர் பயிற்றுநர்கள்
பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் அனைவரும் மருத்துவம் போன்ற
தொழில் சார்ந்த கல்லூரியில் பயிலும் வகையில் ஒன்றிய அளவில் சிறந்த
மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. மெல்லக் கற்கும் மாணவர்கள் மீது பாடவாரியாக
சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்றார்.
மாவட்டக் கல்வி அலுவலர் அகமதுபாஷா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சின்னராஜ், பள்ளி ஆய்வாளர் சென்னப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.