விவசாய பயிர்க்கடனில் வட்டி மானிய திட்டத்தில் மாற்றம் செய்யக்கூடாது என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
விவசாய கடன்
விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் திட்டத்தில் வட்டி மானியம் வழங்குவது தொடர்பாக, தற்போதுள்ள நடைமுறையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி கடிதம் எழுதியதை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
அந்த கடிதத்தில் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் திட்டத்தில்,
மத்திய அரசு கொண்டு வரும் மாற்றங்களினால் ஏற்படும் பின்னடைவு குறித்து
குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த கடிதத்துக்கு பிரதமரின் பதிலை
எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இந்த முக்கிய பிரச்சினையில்
தாங்கள் உடனடியாக தலையிட்டு பரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக்
கொள்கிறேன். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
விவசாய கடன்
விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் திட்டத்தில் வட்டி மானியம் வழங்குவது தொடர்பாக, தற்போதுள்ள நடைமுறையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி கடிதம் எழுதியதை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
வட்டி மானியம்
பயிர் கடன்களுக்கு வட்டி மானிய திட்டத்தில் மத்திய அரசு 2 முக்கிய மாற்றங்களை செய்ய திட்டமிட்டு வருவது தெரியவந்துள்ளது. வங்கிகள் முன்னுரிமைப் பிரிவுக்கு வழங்கும் அடிப்படை விகிதத்துடன் இணைந்த வட்டி விகிதப்படி, கடன் வழங்க அனுமதிப்பது முதலாவது மாற்றமாகும். இரண்டாவதாக, வட்டி மானியத்தை விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்திய பின்னர் மானியத் தொகையை அவர்கள் கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக விநியோகிக்கும் திட்டமாகும்.
வங்கிகள் வழங்கிய கடனுக்கு ஏற்ப, அவற்றுக்கு வட்டி மானியத்தை விடுவிக்கும் தற்போதைய நடைமுறைக்கு இது எதிராக அமைந்துள்ளது. அடிப்படை விகிதத்துடன் இணைந்த தற்போதைய வட்டி விகிதங்களை கணிசமாக அதிகரிப்பது அல்லது விவசாய கடன்களுக்கான சலுகைகளை குறைப்பது என்பது வேளாண்துறை சந்தித்து வரும் நிச்சயமற்ற சூழ்நிலையில் தேவையற்ற நடவடிக்கையாக இருக்கும். மேலும் அது பிற்போக்கான நடவடிக்கையாகவும் அமைந்துவிடும்.
தீவிர பரிசீலனை
விவசாயிகள் அதிக வட்டி விகிதத்தை செலுத்தி, அதன்பிறகு வட்டி மானியத்தை நேரடி பணப்பரிமாற்றத் திட்டத்தின் மூலம் பெறும் முறைக்கு மாறுவது இத்திட்டத்தையே தேவையற்ற வகையில் சிக்கலாக்கிவிடும். அத்துடன் விவசாயிகளின் துயரத்தையும் அதிகரித்துவிடும். முந்தைய முறைப்படி, விவசாயிகளின் கணக்குகளின் கீழ் வங்கிகள் கடன் வழங்கியதும், அந்த கடனுக்கு விவசாயிகள் ஆரம்பக் கட்டத்திலேயே அதாவது, கடன்பெறும் போதே சலுகை பெற்று வந்தனர். இந்த சூழ்நிலையில், நேரடிய பணப்பரிமாற்றம் என்ற புதிய முறைக்கு மாறுவது, விவசாயிகளுக்கு குறித்த காலத்தில் கடன் கிடைப்பதிலும், தேவைப்படும் விவசாயிகளை கண்டறிவதிலும் எந்த ஒரு நன்மைகளும் ஏற்பட்டு விடாது. எனவே, புதிய திட்டம் குறித்து தீவிர பரிசீலனை செய்வது அவசியமாகிறது. இத்திட்டத்தின் சாதக பாதகங்கள் குறித்து ஆழ்ந்து ஆராய்ந்து, அதன் பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் நலனைக் காக்க பயனுள்ள அப்பழுக்கற்ற கடன் வழங்கும் முறையை செயல்படுத்த முடியும்.
விளக்கம் இல்லை
மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் வரை, வரும் 30-ந் தேதி வரை தற்போதுள்ள வட்டி மானிய திட்டமே இடைக்கால ஏற்பாடாக தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை தற்போது வரும் ஜூலை மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, திட்டம் முடிவடைவதற்கான கால அவகாசம் விரைவாக நெருங்கி வருகிறது.
தற்போதைய முறை தொடர்ந்து நீடிக்குமா? என்பதில் நிச்சயமற்ற சூழ்நிலை உள்ள நிலையிலும், புதிய நடைமுறை குறித்த தெளிவான விளக்கங்கள் இல்லாத நிலையிலும், வேளாண்துறை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக பருவமழை தொடங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவும், வறட்சி அபாயம் சூழ்ந்துள்ள நிலையிலும், இது வேளாண்துறைக்கு பெரும் பாதகமாக அமைந்துவிடும்.
உண்மை நிலவரம்
இந்த கட்டத்தில், தமிழக அரசு வேளாண் கடன்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் மாநில அரசின் பட்ஜெட் நிதியின் ஆதரவோடு, மத்திய அரசு அளித்துவரும் வட்டி மானியத்தைக் காட்டிலும், கூடுதலாக 4 சதவீத வட்டி மானியம் அளித்துவருவதை சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
இதன்மூலம் கடன் தொகையை தவறாமல் செலுத்தும் விவசாயிகளுக்கு குறுகிய கால பயிர் கடன்கள் வட்டியின்றி எளிதாக கிடைக்கிறது. வேளாண்துறைக்கு போதிய அளவு கடன் வழங்கி விவசாய துறைக்கு பெரும் ஊக்கம் அளிக்க வேண்டிய இத்தருணத்தில், கீழ்மட்ட உண்மை நிலவரங்களை ஆராயாமல், மானிய திட்ட முறையில் பெரும் மாற்றங்களை கொண்டு வருவது அபாயகரமாகிவிடும்.
உடனடி தலையீடு
தமிழகத்தில் கோடைக்கால சாகுபடி குறிப்பிட்ட அளவே நடைபெறுகிறது என்பதையும், ஜூன் மாதம் முதல் தொடங்கும் தென்மேற்கு பருவமழை காலத்திலும், பின்னர் வடகிழக்கு பருவமழை காலத்திலும் தான் விவசாயிகள் பயிர் கடன்களை அதிக அளவில் வாங்குகின்றனர் என்பதை தாங்கள் அறிவீர்கள். பயிர் கடன்களுக்கான வட்டி மானிய திட்டம் நீடிப்பது குறித்து முடிவெடுப்பதில் மேலும் தாமதம் ஏற்படுமானால், அது தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதிலும் வேளாண்துறையை கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, அனைத்து மாநில விவசாயிகளுக்கான இந்த திட்டத்தின் முக்கியத்துவம் கருதி, மேலும் சிறப்பான பயனுள்ள பயிர் கடன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் மாற்றங்கள் குறித்து ஆராயும் முன்பு தற்போதுள்ள வட்டி மானிய திட்டத்தை, தற்போதைய வடிவத்திலேயே தொடர்ந்து நீட்டிக்க தாங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோட்டுக் கொள்கிறேன்.
கருத்தொற்றுமை
உத்தேச மாற்றங்கள் குறித்து ‘தேசிய வளர்ச்சிக் குழு’ கூட்டத்திலோ அல்லது ‘நிதி ஆயோக்’ நிர்வாக குழுவிலோ விவாதித்து, அதில் கருத்தொற்றுமை ஏற்பட்ட பின்னரே, புதிய மாற்றங்களுடன் இத்திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.