தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு,
சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தொடங்குகிறது. முதல்நாளில், மாற்றுத்
திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினரைச் சேர்ப்பதற்கான கலந்தாய்வு
நடைபெறுகிறது.சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நவீன வசதிகளுடன் கூடிய அரங்கில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது. மாற்றுத்
திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டில் சிறந்து
விளங்குவோர் ஆகிய மூன்று சிறப்புப் பிரிவினருக்கு உரிய 76 எம்.பி.பி.எஸ்,
ஒரு பி.டி.எஸ். இடங்கள் வெள்ளிக்கிழமை நிரப்பப்படும்.
மாற்றுத்
திறனாளிகள்: தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம்
உள்ள 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத
எம்.பி.பி.எஸ். இடங்கள் (68 இடங்கள்) ஒதுக்கப்படும். இந்த ஆண்டு மாற்றுத்
திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த 82 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஓமந்தூரார் கலந்தாய்வு அரங்கிலேயே மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்தி 68 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். மாற்றுத் திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் தகுதி பெற்று விருப்பப்படும் நிலையில், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 3 பி.டி.எஸ். இடங்களையும் தேர்வு செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள்: முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 5 இடங்களும் பி.டி.எஸ். படிப்பில் ஒரு இடமும் ஒதுக்கப்படும். இந்தப் பிரிவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர இந்த ஆண்டு மொத்தம் 632 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான எம்.பி.பி.எஸ். இடங்கள் 3-லிருந்து 5-ஆக இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசு ஆணை ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவினருக்கு பி.டி.எஸ். படிப்பில் ஓர் இடம் வழக்கம்போல ஒதுக்கீடு செய்யப்படும்.
விளையாட்டுப் பிரிவு: விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்கும் 3 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கப்படும். இந்தப் பிரிவில் 3 எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர மொத்தம் 424 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம் இந்தப் பிரிவுக்கு உரிய மாணவர்களைத் தேர்வு செய்து பரிந்துரைப் பட்டியலை மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு அனுப்பும். அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை கலந்தாய்வு நடத்தப்பட்டு விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்கும் 3 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறினர்.
அனைத்துப் பிரிவினர்: அனைத்துப் பிரிவினருக்கான எம்.பி.பி.எஸ். முதல்கட்டக் கலந்தாய்வு சனிக்கிழமை (ஜூன் 20) தொடங்குகிறது. தொடர்ந்து வரும் 25-ஆம் தேதி வரை முதல்கட்டக் கலந்தாய்வு
நடைபெறுகிறது.
"சேர்க்கைக் கடிதம் அளிக்கப்படாது'
எம்.பி.பி.எஸ். முதல்கட்டக் கலந்தாய்வு ஏற்கெனவே அறிவித்தபடி நடைபெறும். அதேசமயம், சேர்க்கைக் கடிதம் அளிக்கப்பட மாட்டாது என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது:
கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு எதிராக இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தொடர்ந்துள்ள வழக்கில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். முதல்கட்டக் கலந்தாய்வை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எம்.பி.பி.எஸ். முதல்கட்டக் கலந்தாய்வை வரும் ஜூலை 3-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மேலும் மாணவர்களின் நலனுக்காக இந்த மாத இறுதியில் பி.இ. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பு எம்.பி.பி.எஸ். முதல்கட்டக் கலந்தாய்வை முடிக்க வேண்டும்.
எனவே வெள்ளிக்கிழமை (ஜூன் 19) முதல்வரும் 25-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமையும் கலந்தாய்வு உண்டு) எம்.பி.பி.எஸ். முதல்கட்டக் கலந்தாய்வு தொடர்ந்து நடத்தப்படும்.
எனினும் கலந்தாய்வில் பங்கேற்று மருத்துவக் கல்லூரிகளைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு உயர் நீதிமன்ற வழக்கின் உத்தரவுக்குப் பிறகு சேர்க்கைக் கடிதம் அளிக்கப்படும் என்றனர்.