முயற்சி, உழைப்பு, வைராக்கியத்துடன் இருந்தால் உச்சத்தை தொட முடியும்
என்று, திருவண்ணாமலை எஸ்.கே.பி. ஐ.ஏ.எஸ். அகாடமி இலவச பயிற்சி மைய தொடக்க
விழாவில் தமிழக புள்ளியியல் துறை முதன்மை செயலாளர் வி.இறையன்பு பேசினார்.
ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய தொடக்க விழா
திருவண்ணாமலை எஸ்.கே.பி. என்ஜினீயரிங் கல்லூரியில் எஸ்.கே.பி. ஐ.ஏ.எஸ். அகாடமி இலவச பயிற்சி மைய தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி தலைவர் கு.கருணாநிதி தலைமை தாங்கி பேசினார். பதிவாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
ஐ.ஏ.எஸ். இலவச பயிற்சி மையத்தினை தமிழக அரசின் பொருளியல் மற்றும்
புள்ளியியல் துறை முதன்மை செயலர் வி.இறையன்பு தொடங்கி வைத்து பேசினார்.ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய தொடக்க விழா
திருவண்ணாமலை எஸ்.கே.பி. என்ஜினீயரிங் கல்லூரியில் எஸ்.கே.பி. ஐ.ஏ.எஸ். அகாடமி இலவச பயிற்சி மைய தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி தலைவர் கு.கருணாநிதி தலைமை தாங்கி பேசினார். பதிவாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:–
வாய்ப்புகள் அதிகம் உள்ளது
இந்திய அரசுப்பணிகளில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்ந்த நிலைகளில் இருப்பவர்கள் எல்லாரும் குடிமைப்பணி தேர்வு எழுதி வந்தவர்கள்தான். பிறந்த இடமோ, வசதியோ, இத்தேர்வு எழுத தடை ஏற்படுத்துவதில்லை.
நாளுக்கு நாள் நம்முடைய தலைமுறைகளின் ஆற்றல், நுண்ணறிவு அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. அன்றைய நாட்களைவிட இப்போது வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நம்மிடம் திறமை குறைபாடு இல்லை என்பதை முதலில் உணர வேண்டும். உங்களிடம் அபரிமிதமான ஆற்றல் உள்ளது என்பதை நம்புங்கள். குடிமைப்பணி என்பது திட்டங்களை தயார்படுத்துதல், செயல்படுத்துதல், கொள்கை முடிவுகளை எடுத்தல் போன்றவை ஆகும்.
சவால்கள் இருக்கின்றன
மக்களுடன் மக்களாக பணியாற்ற விருப்பம் இல்லாதவர்கள் இதனை தேர்வு செய்யாமல் இருப்பது நல்லது. ஏன் என்றால் இப்பணியானது தினமும் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர் கொள்வது, மக்களை சந்தித்து அவர்கள் பிரச்சினைகளை தீர்க்க நல்ல முடிவு எடுப்பது போன்றவை. தினமும் சந்திக்கும் பிரச்சினைகளினால் நீங்கள் நல்ல அறிவு முதிர்ச்சியை பெறுவீர்கள்.
இத்துறையிலும் பல சவால்கள் இருக்கின்றன. அவை இருப்பதால் தான் வாழ்க்கை இனிக்கிறது. முடிவு தெரிந்த ஒரு சினிமாவை யாரும் பார்க்க விரும்புவதில்லை. வாழ்க்கையின் சுவாரசியம் சவால்களில்தான் இருக்கிறது. உங்களின் முழு திறமையும் சவால்களில் தான் வெளிவருகிறது.
ஆழமாக படியுங்கள்
குடிமை தேர்வு மூன்று கட்டங்களை கொண்டது. முதன்மைதேர்வு, முக்கியமான தேர்வு, ஆளுமைத்தேர்வு. இந்த மூன்று தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்களே குடிமைப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
பலருக்கு இதற்கான பயிற்சியை எங்கிருந்து தொடங்குவது என்பது தெரிவதில்லை. முதலில் செய்திதாள்களை ஒரு மணி நேரம் ஆழமாக படியுங்கள். உலக வரைபடத்தையும், இந்திய வரைபடத்தையும் சுவரில் மாட்டி வையுங்கள். தலையங்கத்தையும் கட்டுரைகளையும் கத்தரித்து வைத்து படியுங்கள். உள்நாடு வெளிநாடு பெயர்கள் வரும்போது வரைபடங்களில் அவை எங்கு உள்ளது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு நாளில் 10 புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்ளுங்கள். இப்படி செய்தால் ஒரு ஆண்டில் 205 நாடுகளைபற்றியும், 12 ஆயிரம் புதிய வார்த்தைகளையும் கற்றுக்கொள்வீர்கள்.
உச்சத்தை தொட முடியும்
ஏற்கனவே பிளஸ்–2 வரை படித்த பழைய பாடபுத்தகங்களை படியுங்கள். 2–வது ஆண்டில் குடிமைதேர்வு சம்பந்தப்பட்ட புத்தகங்கள், சிறப்பு புத்தகங்கள், டெல்லியில் இருந்து இதற்கென வரும் மாத இதழ்கள் ஆகியவற்றை படியுங்கள். 3–வது ஆண்டில் விருப்ப பாடத்தை தீர்மானியுங்கள். 4–வது ஆண்டை முடித்து, அடுத்த ஆண்டு நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெறலாம். இதற்கு உங்கள் கல்லூரியில் உள்ள நூலகத்தை முழுமையாக பயன்படுத்துங்கள். வாசிப்பதை நேசியுங்கள். அறிவு எழுதியதை அனுபவம் அழித்து விடும் என்று கண்ணதாசன் கூறினார். அனுபவப்பட்ட நாங்கள் சொல்கிறோம், உங்கள் அறிவால் அதை எழுதிக் கொள்ளுங்கள். நம்பிக்கையோடு இன்றே அடிஎடுத்து வையுங்கள். முயற்சி, உழைப்பு, வைராக்கியத்துடன் இருந்தால் உச்சத்தை தொட முடியும்
இவ்வாறு அவர் பேசினார்.