நவீன நகரங்கள்' திட்டத்தில் இடம்பெற்றுள்ள 100
நகரங்களின் பட்டியல், செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று
மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
"நவீன தொழில்நுட்பங்கள்' குறித்த தேசிய மாநாடு
ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கிடையே, மத்திய
அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியத் திட்டங்களில்
ஒன்றான "நவீன நகரங்கள்' திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 100 நகரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள நகரங்களின்
பெயர்ப் பட்டியல், செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வமாக
வெளியிடப்படும்.
முதல்கட்டமாக, முன்னுரிமையின் அடிப்படையில்
தேர்ந்தெடுக்கப்படும் 20 நகரங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இதனை திறம்பட நடைமுறைப்படுத்தும் வகையில், இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள
நகரங்களில், சிறப்புப் பரிந்துரைக் குழுக்கள் அமைக்கப்படும். தலைமைச் செயல்
அதிகாரியின் தலைமையில் செயல்பட உள்ள இந்தக் குழுவில் மத்திய அரசு, மாநில
அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்.
இந்தக் குழுவானது, நவீன நகரங்கள் திட்டத்தை மதிப்பீடு
செய்வது, நிதியை வழங்குவது, திட்டத்தை செயல்படுவது, கண்காணிப்பது,
நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.
இதற்காக, இத்திட்டம் செயல்படுத்தப்படும் நகரங்களுக்கு
தலா ரூ.100 கோடி வீதம், சிறப்புப் பரிந்துரைக் குழுவுக்கு மத்திய அரசு
அளிக்கும். இதே தொகையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும், உள்ளாட்சி
அமைப்புகளும் வழங்கும் என தெரிவித்தார்.