சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆலோசனை கூட்டம்
நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ‘இ-நேத்திரா’ திட்டமும், கும்மிடிப்பூண்டியில் வாக்காளர்களை தேடி சென்று உதவி செய்யும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கென தனியாக ஒரு மையம் தொடங்கப்பட்டு, வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா, பறக்கும் படை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதுடன், வாக்காளர்கள் அளிக்கும் புகார் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முடிந்தது.
நீக்கப்படவில்லை
கடலூரில் நடந்த கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த 5 பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் யாரும் நீக்கப்படவில்லை. இதுகுறித்து ஓட்டுசாவடி அலுவலருக்கு விளக்க நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 12 பேர் நீக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. இதில் 9 பேருக்கு பல்வேறு முகவரிகளில் பெயர் இருந்ததால், அவர்கள் வசிக்கும் பகுதியில் மட்டும் பெயரை வைத்துவிட்டு மற்ற இடங்களில் நீக்கப்பட்டு உள்ளது. 2 பேர் இறந்துவிட்டனர். ஒருவருடைய மனைவியே தன்னுடைய கணவர் ஓசூரில் தங்கியிருப்பதாக கூறினார்.
வரைவு வாக்காளர் பட்டியல்
வரைவு வாக்காளர் பட்டியல் வரும் செப்டம்பர் 15-ந் தேதி வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்களை சேர்க்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 2.76 கோடி பேர் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வாக்காளர்கள் நலன்கருதி வாக்குச்சாவடி எங்கு உள்ளது? என்பதை செல்போனில் உள்ள ‘சாப்ட்வேர்’ மூலம் தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய திட்டம்
இதேபோன்று தமிழகத்தில் உள்ள 64 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகள் மற்றும் அங்குள்ள வசதிகள் குறித்து படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படங்கள் ‘கம்ப்யூட்டர் கூகுள் வரைபடத்தில்’ வெளியிடப்படும்.
இதன்மூலம் வாக்காளர்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ள ‘கூகுள் வரைபடப்பகுதிக்கு’ சென்று தங்களுடைய வாக்காளர் எண்ணை பதிவு செய்தால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மற்றும் அங்கு உள்ள வசதிகள், செல்லும் வழி போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும். இது நாட்டிலேயே முதன்முறையாக அமல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.








