கடந்த மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு நடைபெற்று, பின்னர் முடிவு
வெளியிடப்பட்டது. மாணவ-மாணவிகள் வசதிக்காக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
(புரவிஷனல் மதிப்பெண் சான்றிதழ்) கடந்த மே மாதம் 29-ந் தேதி
பள்ளிக்கூடங்கள் மூலம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டன. இந்த
சான்றிதழ்களை மாணவ-மாணவிகள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து
படிக்கும்போது கொடுத்துள்ளனர். இந்த சான்றிதழ்கள் ஆகஸ்டு 21-ந் தேதி வரை
செல்லுபடியாகும்.
அதற்கு முன்பாக நிரந்தர மதிப்பெண் சான்றிதழ்கள் 5-ந் தேதி காலை 10 மணி
முதல் மாணவ-மாணவிகள் படித்த பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் என்று அரசு
தேர்வுத்துறை அறிவித்தது.
அதன்படி நேற்று எஸ்.எஸ்.எல்.சி. நிரந்தர மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
பள்ளிக்கூடங்களில் தொடங்கியது. பெரும்பாலான மாணவ-மாணவிகள் தற்போது பிளஸ்-1
படிக்கிறார்கள். அதனால் அவர்கள் சான்றிதழை பெற்றுக்கொண்டு வகுப்புகளுக்கு
சென்றுவிட்டனர். தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு எழுதிய
மையத்தில் பெற்றனர்.
நேற்று சான்றிதழை பெற முடியாத பள்ளிக் கூட மாணவர்கள் இன்று(வியாழக்கிழமை)
அல்லது எப்போது வேண்டுமானாலும் பள்ளிக்கூடங்களில் பெற்றுக்கொள்ளலாம்.