தமிழக அரசு மருத்துவமனைகளில் 7,243 பணியிடங்களுக்கு செவிலியர்களை நியமிப்பதற்கான தகுதித் தேர்வு நடைபெற்றது. அதில், 38,116 பேர் கலந்து கொண்டனர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சார்ந்துள்ள வகுப்பு, மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் பூர்த்தியாகி உள்ளன. இதில் தேர்வு செய்யப்பட்டோர் குறித்த பெயர்ப் பட்டியல் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் கூறியதாவது:
ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்க்கும் நாள்களில் கலந்து கொள்ளாதவர்களுக்கு தனியாக சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெறும். சுமார் 7,500 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.








