சென்னை பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் ‘சென்னை தினம்– 376’ ஒரு வார
கொண்டாட்டம் நேற்று தொடங்கியது. அருங்காட்சியகத்தில் அபூர்வ புகைப்படங்களை
மாணவர்கள் பார்த்து ரசித்தனர்.
சென்னப்பட்டணம்
கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன்
ஆகியோர் தங்களின் உதவியாளரான பெரிதிம்மப்பாவின் உதவியுடன், செயின்ட் ஜார்ஜ்
கோட்டை உள்ள இடத்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் மகன்களான அய்யப்பன்,
வேங்கடப்பன் ஆகியோரிடமிருந்து விலைக்கு வாங்கினர்.
அந்த இடத்தில்
கோட்டையை கட்டி, அதன் வடக்கு பகுதியில் உள்ள ஊருக்கு, அந்த இடத்தை
விற்றவர்களின் தந்தை பெயரை வைத்து சென்னப்பட்டணம் என்று அழைத்தனர்.
376–வது சென்னை தினம்
இந்தியா சுதந்திரம் பெற்றபின்பு மதராஸ், சென்னை மாகாணத்தின்
தலைநகரானது. 1969–ம் ஆண்டு தமிழ்நாடு எனவும், 1996–ம் ஆண்டு சென்னை எனவும்
பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
சென்னை தோற்றுவிக்கப்பட்ட 1639–ம் ஆண்டு ஆகஸ்டு 22–ந் தேதியை நினைவுகூரும் வகையில் தற்போது 376–வது சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.
கேக் வெட்டினார்
பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளில் நேற்று அதிகாலை
டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குப்பைகளை அகற்றி சுத்தம்
செய்தனர். அந்த பகுதியில் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் பழமையை பறைசாற்றும்
வகையில் மணல் சிற்பங்களை அமைத்து, பார்வையாளர்களுக்கு சென்னையின் பெருமைகளை
எடுத்துக்கூறினர்.
பின்னர் முதியவர் ஒருவர் கடற்கரையில் கேக் வெட்டி
சென்னை தினத்தை சிறப்பாக கொண்டாடியதுடன், சென்னை மாநகருக்கு
வாழ்த்துகளையும் கூறினார். அதிகாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு
சென்னை மாநகரின் பெருமைகளையும் எடுத்துக்கூறினார்.
பாரம்பரிய கட்டிடங்கள்
சென்னையில் உள்ள ராணிமேரி கல்லூரி, மாநில கல்லூரி உள்பட பல்வேறு
பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் சாந்தோம் தேவாலயம் போன்றவற்றின்
புகைப்படங்களுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அவைகளின் வரலாற்று தகவல்களை
விளம்பர பலகைகளில் எழுதி மெரினா கடற்கரையில் இன்னர் வீல் சங்கத்தினர்
அமைத்திருந்தனர்.
இதனை பார்வையிட்ட பொதுமக்களுக்கு கட்டிடத்தின்
வரலாற்று பின்னணியையும், சென்னை மாநகரின் வரலாற்றையும் சங்க உறுப்பினர்கள்
எடுத்துக்கூறினர். தொடர்ந்து நேற்று மாலை மெரினா கடற்கரையில் ‘சென்னையின்
பாரம்பரிய வரைபடம்’ வெளியிடப்பட்டது.
அபூர்வ புகைப்படங்கள்
சென்னை தின விழாவையொட்டி சென்னை மாநகர் தொடர்பான அபூர்வ
புகைப்படங்கள் மற்றும் ஆங்கிலேயர் பயன்படுத்திய போர் தளவாடங்கள் உள்பட
பல்வேறு பொருட்களை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில்
அருங்காட்சியகத்தில் ஒரு வாரத்திற்கு காட்சிக்கு வைக்கப்பட்டன. மாணவர்கள்
உள்பட ஏராளமானோர் இவைகளை பார்த்து ரசித்தனர்.
மயிலாப்பூர்,
ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி
மாணவர்களுக்கான வினாடி வினா போட்டியும் நடந்தது. இதேபோல சென்னையில் பல்வேறு
அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே சென்னையின் வரலாறு தொடர்பான பல்வேறு
நிகழ்ச்சிகள் ஒரு வார காலத்திற்கு நடைபெறுகின்றன.