பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாட்டில்
533 தனியார் பள்ளிகளுக்கு 2015–16, 2016–17, 2017–2018 ஆகிய மூன்று கல்வி
ஆண்டுகளுக்கான கட்டணத்தை நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான கட்டண நிர்ணயக்
குழு அறிவித்திருக்கிறது. சென்னையில் மொத்தம் 76 தனியார் பள்ளிகளுக்கு
இப்போது கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் பெரும்பாலான
பள்ளிகளில் 12 ஆம் வகுப்புக்கான கட்டணம் 40,000 ரூபாய்க்கு மேல்
நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இது அடிப்படை கல்விக் கட்டணம் மட்டுமே.
இத்துடன் சிறப்புக் கட்டணம், பாட நூல் கட்டணம், நன்கொடை ஆகியவற்றையும்
சேர்த்தால் தனியார் பள்ளிகளில் ஆண்டுக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம்
வரை கட்டணம் வசூலிக்கப்படக் கூடும்.
தமிழ்நாட்டிலுள்ள தனியார்
பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணத்தையும் அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி குழு
தான் நிர்ணயிக்கிறது. தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழுவின் (NAAC)
தரச்சான்று பெறப்பட்ட படிப்புகளுக்கு ரூ.45 ஆயிரமும், தரச்சான்று
பெறப்படாத படிப்புகளுக்கு ரூ.40 ஆயிரமும் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட
வேண்டும் என்று இக்குழு அறிவித்திருக்கிறது.
கல்வி தான்
வளர்ச்சிக்கான அடிப்படை என்பதால், அதை அனைத்து தரப்பினரும் பெறும் வகையில்
அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்தவும், தனியார் பள்ளிகளில்
கட்டணத்தைக் குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு
அதில் கூறப்பட்டுள்ளது.