கேரளாவில் அரசு கல்லூரிகளில் நேரடி சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து
தலைமை செயலகத்துக்குள் நுழைய முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடியும்,
கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
போராட்டம்
கேரளாவில் உள்ள அரசு கல்லூரிகளில் மாணவ, மாணவிகளின் மதிப்பெண்
தகுதியை கருத்தில் கொள்ளாமல், கல்லூரிகளில் நேரடி சேர்க்கை நடைபெறுவதாக
கேரள கல்வித்துறை மீது பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.
இந்த
நிலையில் அரசு கல்லூரிகளில் நேரடி சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து
நேற்று திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன் இந்திய மாணவ அமைப்பை
சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்ணீர் புகை குண்டு வீச்சு–தடியடி
தலைமை செயலக பிரதான வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்கள்,
திடீரென போலீசாரின் தடுப்பு வேலிகளை தாண்டி குதித்து உள்ளே நுழைய
முயன்றனர். நிலைமை விபரீதமாக போவதை உணர்ந்த போலீசார், உடனே தண்ணீரை பீச்சி
அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை கலைக்க முயன்றனர்.
மேலும்
போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். பதிலுக்கு அவர்களும் போலீசாரை
தாக்கினர். போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த
சம்பவத்தில் அந்த அமைப்பை சேர்ந்த 3 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த 3
பேரையும் போலீசார் தங்களுடைய வாகனம் மூலம் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது.