"கனவல்ல...எழுச்சி! டாக்டர்
அப்துல் கலாம்' என்ற தலைப்பில் குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த அப்துல்
கலாமின் பன்முக ஆளுமை குறித்த உரை நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை
(ஆகஸ்ட் 23) நடைபெறுகிறது.
"தினமணி'யும் சென்னைப் பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு
செய்துள்ள இந்த நிகழ்ச்சி சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில்
நடைபெறுகிறது.
புகைப்படக் கண்காட்சி:
சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில்
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கலாம் குறித்த புகைப்படக்
கண்காட்சியுடன் இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது. அப்துல் கலாமின் அரிய
புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. தொடர்ந்து கலாம்
அன்பர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
நடைபெறுகிறது.
குறும்படம்:
பின்னர், "கனவல்ல; எழுச்சி' என்கிற டாக்டர் அப்துல்
கலாம் பற்றிய குறும்படம் மாலை 5 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு
விழா அரங்கில் திரையிடப்படுகிறது.
எழுச்சியுரை:
அதைத் தொடர்ந்து "கனவல்ல...எழுச்சி! டாக்டர் அப்துல்
கலாம்' என்ற தலைப்பில் கலாமின் பன்முக ஆளுமை குறித்த எழுச்சியுரை
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலாமின்
பன்முக ஆளுமை குறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இரா.தாண்டவன்,
கவிக்கோ அப்துல் ரகுமான், கலாமின் ஆலோசகர் வெ.பொன்ராஜ், டாக்டர் சுதா
சேஷய்யன், கலாமின் சகோதரர் பேரன் ஆ.ப.ஜெ.மு.ஜெ.ஷேக் சலீம், "தினமணி'
ஆசிரியர் கே.வைத்தியநாதன் ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.
"தினமணி' இணையத்தில் நேரலை:
அப்துல் கலாம் குறித்த நிகழ்ச்சிகள் முழுவதையும் www.dinamani.com என்ற இணையதள முகவரியில் நேரலையாக பிற்பகல் 3 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரை பார்க்கலாம்.
அனுமதி இலவசம்:
இந்த நிகழ்ச்சியில் கலாம் அன்பர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் அழைப்பிதழ் எதுவும் இன்றி கலந்து கொள்ளலாம்.