அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முறையாக பராமரித்து, தரம் உயர்த்தவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அரசாணைக்கு தடை
சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்துக்கு மாற்றுவது குறித்து முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2011-ம் ஆண்டு நவம்பர் 2-ந்தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பேராசிரியை மனோன்மணி என்பவர்
பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு,
நூலகத்தை இடமாற்றம் செய்வதற்கு இடைக்கால தடை விதித்து கடந்த 2011-ம் ஆண்டு
நவம்பர் 4-ந்தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில்
இருந்து வருகிறது. அரசாணைக்கு தடை
சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்துக்கு மாற்றுவது குறித்து முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2011-ம் ஆண்டு நவம்பர் 2-ந்தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆய்வு அறிக்கை
இந்தநிலையில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முறையாக பராமரிக்காமல், அதை இழுத்து மூடுவதற்கு தமிழக அரசு முயற்சிக்கிறது என்று கூறி மற்றொரு மனுவை மனுதாரர் மனோன்மணி தாக்கல் செய்தார். அந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல்கள் எம்.சுந்தரம், பி.டி.ஆஷா ஆகியோரை வக்கீல் கமிஷனர்களாக நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டார்கள். இதையடுத்து, அந்த வக்கீல்கள் நூலகத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வக்கீல் கமிஷனர்கள் தங்களது ஆய்வு அறிக்கையை, புகைப்பட ஆதாரத்துடன் தாக்கல் செய்தனர்.
குறைபாடுகள்
அந்த அறிக்கையை நீதிபதிகள் படித்துப்பார்த்தனர். புகைப்படங்களையும் பார்வையிட்டனர். அப்போது, அரசு தரப்பில் அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, மனுதாரர் சார்பில் வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
வக்கீல் கமிஷனர்கள் சிறப்பாக பணியாற்றி, அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அவர்களது பணியை பாராட்டுகின்றோம். நூலகத்தில் உள்ள குறைபாடுகள் அனைத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், நூலகத்தின் நிலை குறித்து எங்களுக்கு முன்பு தெரிவித்ததுபோல, அங்கு மிகப்பெரிய குறைபாடுகள் எதுவும் இல்லை. அங்கு பராமரிப்பு பணியிலும், நூலகத்தை தரம் உயர்த்துவதிலும் குறைபாடுகள் உள்ளன. ஆனால், இந்த குறைபாடுகளை சரி செய்வது, அரசுக்கு ஒன்றும் மிகப்பெரிய சவாலான பணி கிடையாது.
வேதனை
நூலகத்தை உருவாக்குவதுடன் அரசின் பணிகள் முடிந்து விடவில்லை. அதை முறையாக பராமரித்து, தரம் உயர்த்துவது அரசின் கடமையாகும். இதற்கு செலவு செய்ய அரசுக்கு ஒன்றும் மிகப்பெரிய நிதி ஆதாரம் தேவையில்லை. இந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிக்கவும், தரம் உயர்த்தவும் தேவையான நிதியை உருவாக்குவதற்கு வக்கீல் கமிஷனர்கள் சில பரிந்துரைகளை செய்துள்ளனர்.
இந்த நூலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கம், தியேட்டர் உள்ளிட்டவைகளை வாடகைக்கு விடுவதன் மூலம் நிதி ஆதாரங்களை திரட்டி, நூலகத்தை அரசு பராமரிக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், கூட்ட அரங்கம், தியேட்டர் உள்ளிட்டவைகளை பயன்படுத்தாமல் அரசு இழுத்து மூடி வைத்திருப்பதும், அவைகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதும் எங்களுக்கு வேதனை அளிக்கிறது.
நிதி ஆதாரம்
மேலும், வக்கீல் கமிஷனர்கள் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை நிவர்த்தி செய்ய தமிழக அரசு கால நிர்ணயம் செய்யவேண்டும். அந்த பணிகளை மேற்கொள்வது குறித்த அட்டவணையை தமிழக அரசு தயாரித்து, அதன்படி செயல்படவேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான அறிக்கையை அவ்வப்போது இந்த ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்.
நூலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கம், தியேட்டர் ஆகியவற்றை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு, நூலகத்தை முழுமையாக பராமரித்து, அவ்வப்போது தரம் உயர்த்தவேண்டும்.
அண்ணா பிறந்தநாள்
அதேபோல, நூலகத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த காலிப்பணியிடங்களை, பணி விதிகளின்படி நிரப்பவேண்டும். இந்த நூலகத்தில் உள்ள குறைகளை விரைவாக தமிழக அரசு நிவர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையுடன், இந்த மனுவை முடிவுக்கு கொண்டு வருகின்றோம்.
எங்களது உத்தரவின்படி, தமிழக அரசு இந்த நூலகத்தின் குறைகளை நிவர்த்தி செய்து, அதுதொடர்பான அறிக்கையை வருகிற செப்டம்பர் 15-ந்தேதி, அதாவது அண்ணா பிறந்தநாள் அன்று தாக்கல் செய்யவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.