வழக்கமாக வட கிழக்கு பருவமழை தொடங்கியதும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகுவதும் அதன் காரணமாக பலத்த மழைபெய்வதும் உண்டு. தமிழ்நாட்டில் கடந்த 28-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
அநேக இடங்களில் மழை பெய்யும்
இது குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-
வங்கக்கடலில் இலங்கை அருகே நேற்று முன்தினம் மேலடுக்கு சுழற்சி இருந்தது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. இலங்கை அருகே இருந்த மேலடுக்கு சுழற்சி, அங்கிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து கன்னியாகுமரி அருகே சென்றுள்ளது.
இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (சனிக்கிழமை) அநேக இடங்களிலும், கடலோர தென் மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
தீவிரம் அடைந்த புயல்
அரபிக்கடலில் உருவான சபாலா என்ற புயல், தீவிரம் அடைந்து உள்ளது. அது நேற்று காலை 8-30 மணி நிலவரப்படி ஓமன் நாட்டில் உள்ள சலாலா நகருக்கு கிழக்கில் தென் கிழக்கில் 850 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அந்தப்புயல் மேலும் தீவிரம் அடைந்து அதி தீவிர புயலாகமாறலாம். அது நவம்பர் 2-ந்தேதி ஓமன் - ஏமன் நாடுகளுக்கு இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
பாபநாசம் 9 செ.மீ.
பாபநாசம் 9 செ.மீ., மகாபலிபுரம் 8 செ.மீ.,பூதப்பாண்டி 5 செ.மீ., சென்னை டி.ஜி.பி.அலுவலகம், செங்கோட்டை, மைலாடி தலா 4 செ.மீ., பாம்பன், அண்ணாபல்கலைக்கழகம், தாம்பரம் தலா 3 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், ராமேஸ்வரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஸ்ரீவைகுண்டம், தஞ்சாவூர், திண்டிவனம், நன்னிலம் தலா 2 செ.மீ. தென்காசி, மணிமுத்தாறு, சென்னை விமானநிலையம், காரைக்கால்,செங்குன்றம், திருவாலங்காடு, பரங்கிப்பேட்டை, ஆய்க்குடி, ஜெயங்கொண்டம், பெருங்கலூர், கந்தவர்கோட்டை, திருத்தணி, விளாத்திக்குளம், சிதம்பரம், தக்கலை, தாமரைப்பாக்கம், பூண்டி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, புள்ளம்பாடி, குழித்தலை, விருதுநகர் தலா 1 செ.மீ.மழை பெய்துள்ளது.








