காஞ்சிபுரத்தில் அனைத்து
பள்ளிகளும் வழக்கம் போல இயங்கின. அதே நேரம் 50 சதவீத ஆசிரியர்கள் வகுப்பை
புறக்கணி்த்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு
பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க
வேண்டும். 2011 சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்ததற்கு
ஏற்ப தமிழக அரசு தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நீக்கம் செய்து, பழைய
ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை
குழு (ஜாக்டோ) சார்பில் அக்டோபர் 8-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம்
நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஜாக்டோ அமைப்பு
சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து
கொண்டால் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 1 நாள் சம்பளம் பிடித்தம்
செய்யப்படும் என்று மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எச்சரித்திருந்தார்.
ஆனால் அதையும் மீறி தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானோர்
வகுப்புக்கு செல்லவில்லை. இவ்வாறு வகுப்புகளை புறக்கணித்த ஆசிரியர்கள்
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்
நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்
கலந்து கொண்டவர்களில் 95 சதவீதம் ஆசிரியைகளே இடம்பெற்றிருந்தனர்.
தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களால் வராததால் பள்ளி
வகுப்பு நேரம் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகள் மாவட்ட தொடக்க கல்வி
அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி
ஊழியர்கள் உள்ளிட்டோர் பள்ளி மாணவர்களை கண்காணித்தனர். அதே நேரம்
மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களில் சுமார் 50
சதவீதம் பேர் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் வகுப்புகள்
வழக்கம்போல நடைபெற்றது. மேலும் பகுதி நேர ஆசிரியர்களும் முழுமையாக
ஈடுபடுபடுத்தப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 754 ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளிகள், 141 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், 289 ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், 37 அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள் என
மொத்தம் 1,221 பள்ளிகள் இயங்குகின்றன. மேலும் 222 அரசு உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளிகள், 62 அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என
மொத்தம் 290 பள்ளிகள் உள்ளன. இது தவிர ஆதி திராவிட நலப்பள்ளிகளும்
வழக்கம்போல இயங்கின.








