சீனாவை
விட இந்தியாவில் ஊழல் குறைவு என ஜெர்மனியை சேர்ந்த டிரான்ஸ்பேரன்சி
இன்டர்நேஷனல் என்ற ஊழல் கண்காணிப்பு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி 2014ம் ஆண்டிற்கான ஊழல் புலனாய்வு குறியீட்டில், மொத்தமுள்ள 175
நாடுகளில் 10 இடங்கள் முன்னேறி 85 வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. சீனா
20 இடங்கள் பின் தங்கி 100வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 18
வருடங்களில் சீனாவை விட இந்தியா ஊழல் குறியீட்டில் தர எண்ணிக்கையில்
குறைந்திருப்பது இதுவே முதல்முறை. உலகிலுள்ள நிபுணர்களின் கருத்தை
அடிப்படையாக கொண்டு நாடுகளை குறித்த ஆய்வை ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம்
மேற்கொண்டுள்ளது.
இந்த ஊழல் புலனாய்வு குறியீடு ஆனது உலக அளவில் பொது துறை நிறுவனங்களில்
காணப்படும் ஊழல்களின் மட்டம் குறித்து அளவீடு செய்துள்ளதுடன், எச்சரிக்கை
தகவலையும் தெரிவிக்கின்றது. அதன்படி, ஒரு நாடு கூட சரியான மதிப்பெண்ணை
பெறவில்லை. இந்நாடுகளில் 3ல் 2 பங்கு நாடுகள் 50 மதிப்பெண்களை விட குறைவாக
பெற்றுள்ளது. பூஜ்யம் (0) முதல் நூறு (100) வரை உள்ள அளவீட்டில் பூஜ்யம்
என்பது அதிக ஊழல் மற்றும் நூறு என்பது அதிக சுத்தம் என்பதை குறிக்கிறது என
அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.லஞ்சம் பரவலாக இருக்கிறது, ஊழலுக்கான தண்டனை குறைவாக இருக்கிறது மற்றும் குடிமகன்களின் தேவைகளை பொது அமைப்புகள் கவனத்தில் கொள்ளாமல் இருக்கிறது என்பதற்கான அடையாளத்தை குறைவான மதிப்பெண் அடையாளப்படுத்துகிறது என அக்குறியீடு தெரிவிக்கிறது.
குறியீட்டில் உயர்ந்த இடத்தில் இருக்கும் நாடுகளும் செயல்பட வேண்டிய தேவையில் இருக்கிறது. ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள முன்னணி நிதி மையங்கள் ஊழலை முடிவுக்கு கொண்டு வர வேகமுடன் வளரும் பொருளாதாரத்துடன் இணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
உலகளவிலான தலைமைத்துவ பங்கு மற்றும் நிதி முறைகேட்டை தடுத்தல் மற்றும் ரகசிய நிறுவனங்கள் ஊழல் திரைக்குள் இருப்பதை முடிவுக்கு கொண்டு வருதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டிய தேவை ஜி20 நாடுகளுக்கு உள்ளது. குறியீட்டில் உள்ள ஒரு நாட்டின் தரம் அதன் நிலையை குறித்க்கிறது.
இந்த குறியீட்டில் டென்மார்க் முதல் இடத்திலும் அதனை தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் உள்ளன. இந்தியா 10 இடங்கள் முன்னேறி தர வரிசையில் 85வது இடத்தில் உள்ள நிலையில் குறைவான ஊழல் கொண்ட நாடுகளான டென்மார்க், நியூசிலாந்து மற்றும் பின்லாந்து ஆகியவற்றுடன் இணைய நீண்ட தூரம் செல்ல வேண்டியது உள்ளது.