தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் கலந்துகொண்ட
திருநங்கை பிரித்திகா யாசினிக்கு, சப்–இன்ஸ்பெக்டர் பணி வழங்கவேண்டும்
என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருநங்கை
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் கே.பிரித்திகா யாசினி. திருநங்கையான
இவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பின்
அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் சப்–இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பம்
செய்தார். ஆனால், திருநங்கை என்பதால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து
பிரித்திகா யாசினி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கை
விசாரித்த ஐகோர்ட்டு, எழுத்து தேர்வில் கலந்துக்கொள்ள அனுமதிக்கும்படி
உத்தரவிட்டது. இதனடிப்படையில், கடந்த மே மாதம் நடந்த எழுத்து தேர்வில் அவர்
கலந்துக்கொண்டு, வெற்றிப் பெற்றார்.
மூன்றாம் இனம்
இதன்பின்னர், ஐகோர்ட்டு பிறப்பித்த அடுத்தடுத்த உத்தரவுகளின்படி,
அவர் உடல் தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வுகளில் கலந்துக் கொண்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி
புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது. இந்த
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
தேசிய
சட்டப்பணி ஆணைக்குழு தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அரசு
பணிகளில் திருநங்கைகளை, 3–வது இனம் என்று குறிப்பிட்டு, அவர்களுக்கு
வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
அமல்படுத்தவில்லை
இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2014–ம் ஆண்டு ஏப்ரல் 15–ந்
தேதி பிறப்பித்தது. ஆனால், சப்–இன்ஸ்பெக்டர் பதவிக்கான அறிவிப்பை தமிழ்நாடு
சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி 8–ந் தேதிதான்
வெளியிட்டுள்ளது.
எனவே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை, சப்–இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வில் அமல்படுத்தியிருக்கவேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.
தகுதி என்ன?
சப்–இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வில், தமிழ்நாடு சீருடை பணியாளர்
தேர்வாணையம், ‘மூன்றாம்’ நபர் என்ற பிரிவை உருவாக்கியிருந்தால், அந்த
பிரிவினருக்குரிய தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு ஒரு
பிரிவை உருவாக்கப்படாததால், மனுதாரர் தன்னுடைய உரிமையை பெற, இந்த கோர்ட்டை
நாடியுள்ளார்.
இப்போது மனுதாரர் தகுதியை எப்படி நிர்ணயம் செய்து,
அடுத்தக்கட்ட தேர்வு பணியை மேற்கொள்ளலாம்? என்ற கேள்வி எழுந்துள்ளது. 1.11
நொடிகள் காலதாமதமாக ஓடிவந்தது, சப்–இன்ஸ்பெக்டர் பதவி கிடைப்பதற்கு
இடையூறாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இந்த பதவிக்கான தேர்வில்
அவர் பாதி தூரம் ஓடி வந்துவிட்டார். இப்போது அவரை தடுத்து நிறுத்த
விரும்பவில்லை.
பதவி வழங்க வேண்டும்
மேலும், இந்த சப்–இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வில் மனுதாரரை தவிர,
திருநங்கைகள் வேறு யாரும் கலந்துகொள்ளவில்லை. மூன்றாவது இனம் என்ற பிரிவில்
ஆட்களை தேர்வு செய்தால், அது மனுதாரராகத்தான் இருக்கும் என்று அட்வகேட்
ஜெனரல் கூறினார்.
மேலும், அடுத்த முறை காவல்துறையில் உள்ள பதவிக்கு
ஆட்களை தேர்வு செய்யும்போது, மூன்றாம் நபர் என்ற ஒரு பிரிவை
திருநங்கைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சீருடைய பணியாளர்
தேர்வாணையத்துக்கு உத்தரவிடுகிறோம்.
தற்போது, சப்–இன்ஸ்பெக்டர்
பதவியை பெறுவதற்கு மனுதாரர் தகுதியானவர். அவருக்கு அப்பதவியை
வழங்கவேண்டும். மேலும், சப்–இன்ஸ்பெக்டராக பணியில் சேரும் மனுதாரர்
பிரித்திகா யாசினி, பிற திருநங்கைகளுக்கும் இதுபோன்ற வாய்ப்பு
கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன், இந்த பணியை அர்ப்பணிப்புடன்
மேற்கொள்வார் என்று நாங்கள் நம்புகிறோம்.
வக்கீல்களுக்கு பாராட்டு
இந்த வழக்கில் வெளிப்படையாக செயல்பட்ட கூடுதல் அட்வகேட் ஜெனரல்
அரவிந்த்பாண்டியன், அர்பணிப்புடன் செயல்பட்ட மனுதாரர் வக்கீல் பவானி
சுப்புராயன் ஆகியோரை நாங்கள் பாராட்டுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஐகோர்ட்டு
வழங்கியுள்ள இந்த தீர்ப்பினால், தமிழக காவல்துறை வரலாற்றில்,
சப்–இன்ஸ்பெக்டர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை என்ற பெயரை
பிரித்திகா யாசினி பெற்றுள்ளார். இதற்கு முன்பு தமிழக காவல்துறையில் இரு
திருநங்கைகள் போலீசாக பணியாற்றுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள்
பெண்களாக பணியில் சேர்ந்தவர்கள். அதன்பின்னர் உடலில் சில மாற்றங்கள்
ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டது. அந்த மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் அவர்கள் பணி
நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, இந்த
இருவருக்கும் போலீஸ் வேலை வழங்கவேண்டும் என்று கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின்படி, அவர்கள் தற்போது பணியாற்றி வருவது
குறிப்பிடத்தக்கதாகும்.







