உயர் கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக எழும்
புகார்களைத் தொடர்ந்து, அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் சம
வாய்ப்பு மையம் (இஒசி) அமைக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு
(யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:பல்வேறு
மதங்கள், மொழிகள், கலாசாரங்களைக் கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவில்
இன்றைக்கும் நலிவுற்ற, வசதி வாய்ப்புகளற்ற மக்கள் குறிப்பிட்ட சதவீதம்
இருக்கின்றனர்.
இந்த நிலையில், நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும்
சமூக, பொருளாதார சம உரிமையைப் பெற்றுத் தரும் கருவியாக இருப்பது கல்விதான்
என்பதில் யுஜிசி மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. எனவே, அனைவருக்கும் தரமான
கல்வி கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.இதை உறுதிப்படுத்த அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சம வாய்ப்பு மையம் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். இந்த மையம், நலிந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், இந்தப் பிரிவினருக்கு மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் திட்டங்களைக் கண்காணித்து அவர்களைச் சென்றடையச் செய்வது, கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. மையம் (செல்) முறையாகச் செயல்படுகிறதா என்பதை உறுதி செய்வது என்பன உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்த இ.ஒ.சி. மையங்களின் பணிகளையும், மேற்கொண்டுள்ள அனைத்துவிதமான நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் தொடர்ச்சியாகக் கண்காணித்துப் பராமரிக்க வேண்டும்.
ஏற்கெனவே இந்த மையத்தை அமைத்துள்ள கல்வி நிறுவனங்கள் அதுகுறித்த விவரத்தை யுஜிசி-க்கு 15 நாள்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.